சீன அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டால், சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஜி ஜின்பிங் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணமாக இது அமையும். இதனால் இந்தியா–சீனா உறவில் புதிய முன்னேற்றத்திற்கான வாய்ப்பு உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜி ஜின்பிங்கின் இந்தியப் பயணம் தொடர்பான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சீன அதிகாரிகள் தங்குவதற்கான விடுதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாக விவரம் அறிந்த இந்திய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த முறை ஜி ஜின்பிங்குடன் மிகப்பெரிய தூதுக்குழு இந்தியா வரக்கூடும் எனவும் கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு அவர் இந்தியா வந்தபோது 200க்கும் குறைவான அதிகாரிகள் உடன் வந்திருந்த நிலையில், இந்த முறை சுமார் 400 அதிகாரிகள் அடங்கிய குழு வர வாய்ப்புள்ளதாக இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: இந்தியா-சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு! ராணுவ, தூதரக அளவில் முக்கிய முடிவு

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் நீண்டகால கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. இதற்கிடையே, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை படிப்படியாக மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன், நீடிக்கும் கருத்து வேறுபாடுகளை கையாள்வதற்கான வழிகள் குறித்தும் பிரிக்ஸ் மாநாட்டின் போது பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஜி ஜின்பிங்குக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெறுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவரது இறுதி பயணத் திட்டம் மற்றும் நிகழ்ச்சி நிரலும் இறுதி செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிக்ஸ் அமைப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த ஆண்டு உச்சி மாநாடு வெற்றிகரமாக அமைய சீனா ஆதரவு அளிப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஜி ஜின்பிங்கின் இந்தியப் பயணம் குறித்து தற்போது வெளியிடுவதற்கு எந்த தகவலும் இல்லை என்றும் சீன தரப்பு கூறியுள்ளது.
இதனால், ஜி ஜின்பிங்கின் இந்தியப் பயணம் உறுதியாகுமா, மோடி–ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன.
இதையும் படிங்க: இந்தியாவின் உரப் பிரச்னையை தீர்ப்போம்! பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த முக்கிய உறுதி!