புதுடில்லி: பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசியத் தலைவராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டது கட்சிக்குள் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டிலேயே நிறைவடைந்த நிலையில், லோக்சபா தேர்தல் காரணமாக அது நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 14-ம் தேதி நிதின் நபின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஜனவரி 20-ம் தேதி அவர் முழுமையான தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்வு பாஜகவின் அடித்தளத் தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கட்சியின் மூத்த தலைவர்களிடம் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
நிதின் நபின் பீகார் அரசியலில் அறியப்பட்ட முகம் என்றாலும், அவர் பீகாருக்கு வெளியே பாஜக தொண்டர்களுக்குக் கூட அவ்வளவு பரிச்சயம் இல்லாதவர். காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் குடும்ப உறுப்பினர்களையே தலைவர்களாக தேர்வு செய்யும் நிலையில், பாஜக ஒரு சாதாரண தொண்டரை தேசியத் தலைவராக்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பெருமையுடன் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார்?!! தீவிர ஆலோசனை!! ஜன., 20-ல் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!
மோடி கூட, "கட்சியில் இனி என் 'பாஸ்' நிதின் நபின்" என்று கூறி, "வேறு கட்சிகளில் இது சாத்தியமா?" என்று சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்கள் வாதிட்டு வருகின்றனர். ஆனால், இந்த தேர்வு கட்சியின் உள் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதின் நபினை தேர்வு செய்தது பிரதமர் மோடியின் முடிவு என்பதால், மூத்த தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளியே காட்டாமல், உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பாஜகவின் ஒரு மூத்த தலைவர் அநாமதேயமாக கூறுகையில், "பாஜகவில் ஜாதி, மொழி, வயது வித்தியாசம் இன்றி யார் வேண்டுமானாலும் முதலமைச்சர், தேசியத் தலைவர் அல்லது பிரதமர் போன்ற உயர் பதவிகளுக்கு வரலாம்.

ஆனால், தேசியத் தலைவர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை அடையாளம் கண்டால், அவரை தேசிய பொதுச்செயலர் போன்ற உயர் பொறுப்பில் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது பணியாற்ற வைத்த பிறகே தலைவராக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு போதிய அனுபவம் கிடைக்கும். இது பாஜகவின் நீண்டகால நடைமுறை.
உதாரணமாக, அமித் ஷா தேசிய பொதுச்செயலராக இருந்து உத்தரப் பிரதேச தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே தலைவரானார். நட்டாவும் நீண்ட காலம் தேசிய பொறுப்புகளில் இருந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி தலைவரானபோது கூட அவர் நீண்ட காலம் தேசிய துணைத் தலைவராக இருந்தவர்" என்று விளக்கினார்.
மேலும், "2009 லோக்சபா தேர்தலில் பாஜக தோல்வியடைந்தபோது, கட்சியை சீரமைக்க புதியவரை தலைவராக்க முடிவு செய்து, மகாராஷ்டிரா மாநில தலைவராக இருந்த நிதின் கட்கரியை தேசியத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அப்போது கூட கட்சிக்குள் நீண்ட விவாதங்கள் நடைபெற்று அவரது பெயர் இறுதி செய்யப்பட்டது.
ஆனால், இப்போது பீகார் அமைச்சராக இருந்த நிதின் நபின் திடீரென தலைவராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு தேசிய அரசியலில் அனுபவம் இல்லை. கட்சிக்காக உழைத்த திறமையான பல தலைவர்கள் இருக்கின்றனர்; அவர்களில் ஒருவரை கூட பரிசீலித்திருக்கலாம். நிதின் நபின் தான் வேண்டும் என்றால், 2024 லோக்சபா தேர்தல் முடிந்த உடனேயே அவரை தேசிய பொதுச்செயலராக நியமித்திருக்கலாம்.
இப்படி சிலரே முடிவு செய்து தலைவரை அறிவிப்பதால், கட்சிக்காக உழைப்பவர்கள் 'என்ன உழைத்தாலும் பலனில்லை' என்று நம்பிக்கை இழக்கின்றனர். இதை வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். இது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல" என்று அவர் கவலை தெரிவித்தார்.
இந்த அதிருப்தி பாஜகவின் உள் அரசியலை பாதிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மோடியின் தலைமையில் கட்சி வலுவாக இருந்தாலும், தலைவர் தேர்வில் அனுபவமிக்கவர்களை புறக்கணிப்பது கட்சியின் அடித்தளத்தை பலவீனப்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மக்களை சீரழிக்கும் இரட்டை இன்ஜின் ஆட்சி!! இது வளர்ச்சிக்கானதே அல்ல!! பாஜக மீது ராகுல் விமர்சனம்!