திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், 16 வயது சிறுமியை கடந்த 6 ஆண்டுகளாகச் சொந்த உறவினர்களே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாகத் தாத்தா, தாய்மாமன் உள்ளிட்ட 15 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புனிதத்தலமான ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியுள்ள இந்த மனிதாபிமானமற்ற செயல் ஒட்டுமொத்தத் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய சொந்தங்களே ஒரு சிறுமியின் வாழ்க்கையைச் சீரழித்திருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரைத் தொடர்ந்து, திருச்சி மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
ஸ்ரீரங்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர், கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வந்துள்ளார். அந்தச் சிறுமிக்கு 10 வயது இருக்கும் போதே, தாத்தா உறவுமுறை கொண்ட நபர் ஒருவர் தனது பாலியல் பசியைத் தீர்த்துக்கொள்ள அந்தப் பிஞ்சு உயிரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தனது நண்பர்களையும் அழைத்து வந்து அந்தச் சிறுமியைச் சித்திரவதை செய்துள்ளார். இந்தச் சீரழிவு இத்துடன் நின்றுவிடாமல், சிறுமியின் தாய்மாமன் மற்றும் அத்தை மகன் ஆகியோரும் அந்தச் சிறுமிக்குத் தொடர் தொந்தரவு கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் பயங்கரம்... ஐடி பெண் ஊழியர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்...!
வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டப்பட்டதால், இத்தனை ஆண்டுகளாகச் சிறுமி இந்த நரக வேதனையை மௌனமாகச் சகித்து வந்துள்ளார். சமீபத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்த விபரங்களைச் சிறுமி புகாராகத் தெரிவித்ததையடுத்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தாத்தா, தாய்மாமன், அத்தை மகன் மற்றும் தாத்தாவின் நண்பர்கள் உட்பட மொத்தம் 15 பேர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய பலரைத் தனிப்படை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "தூக்கு தண்டனை"...! பெற்ற மகளையே வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய தந்தை... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...!