தமிழக அரசின் மாநிலக் கல்விக் கொள்கை 2025-இன் கீழ், 6 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்துப் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நேரடி கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் பாடத்திட்ட மாற்றப் பணியில், அனைவரின் பங்களிப்பையும் உறுதி செய்யப் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களை 7 மண்டலங்களாகப் பிரித்து இந்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதன் முதற்கட்டமாகச் சென்னை மண்டலத்திற்கான கூட்டம் நேற்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அரங்கேறியது. 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்துவதே இந்தப் புதிய பாடத்திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கலைத்திட்ட வடிவமைப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றுத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். கூட்டத்தில் பேசிய சந்திரமோகன், "புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் என்பது மாணவர்களின் வயதுக்கேற்ற வகையிலும், அவர்கள் விரும்பிப் படிக்கும் வகையிலும் அமைய வேண்டும்; குறிப்பாக 21-ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான வாழ்வியல் திறன்களை வளர்ப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு! பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ஏற்கனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான வரைவுப் பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பாடப்பகுதிகளைச் சீரமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், மாணவர்களின் சுமையைக் குறைப்பது மற்றும் தொழில்நுட்ப அறிவைப் புகட்டுவது குறித்துப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். சென்னை மண்டலத்தைத் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) தொடர்ந்து மற்ற மண்டலங்களிலும் இந்தக் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் பெறப்படும் அனைத்துப் பின்னூட்டங்களும் பரிசீலிக்கப்பட்டு, இறுதிப் பாடத்திட்டம் தயார் செய்யப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: நூலிழையில் தப்பிய 192 பயணிகள்! ஓடுபாதையிலேயே நின்ற ஸ்பைஸ்ஜெட் விமானம்!