முருக பக்தர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும், முருக பக்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்துடனும் முருகன் மாநாடுகள் நடத்தப்படவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. ஜூன் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 3 மணி துவங்கி, இரவு 8 மணி வரை மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள அம்மா திடலில் இந்த பிரம்மாண்ட ஆன்மிக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டு திடலில் ஜூன் 10ம் தேதி முதல் அறுபடை முருகன் கோவில் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு அறுபடை முருகனின் கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வேல், கண்காட்சி பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டை நடத்த 52 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றால் அதற்குரிய நடவடிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்வார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம், 2026ல் பாஜக ஆட்சி என்றும், கூட்டணி அமைச்சரவை தான் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியது குறித்து கேட்டபோது, அதை பொருத்தவரையில் கழக பொதுச்செயலாளர் தான் பதில் அளிக்க வேண்டுமே தவிர என்னை போன்ற தொண்டர்கள் அதற்கு பதில் அளிக்கக்கூடாது என்றார்.
இதையும் படிங்க: அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

அதேபோன்று பாஜக சார்பில் நடைபெறும் முருகன் மாநாட்டில் அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்வது குறித்து பொதுச் செயலாளர் அதற்குரிய நடவடிக்கை எடுப்பார் எனக்கூறிய அவர், நடிகர் விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவார் என்பது குறித்து நீங்கள் தான் (பத்திரிக்கையாளர்கள்) தெரிந்துகொண்டு கூற வேண்டும் என்றார். கோபியில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!