சென்னை: வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் தொடர்ந்து வரும் உள் அமைதியின்மை மீண்டும் தலைதூக்கியுள்ளது. கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, மூத்த நிர்வாகிகளான திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் மற்றும் துணை பொதுச்செயலர் விஸ்வநாதன் உள்ளிட்டோரை இந்த தேர்தலில் ஓரங்கட்ட முடிவு எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கட்சியின் உள் அமைப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
அதிமுக அமைப்புச் செயலர்கள் சிலர் தெரிவித்ததாவது: சீனிவாசன் திண்டுக்கல் எம்எல்ஏவாகவும், விஸ்வநாதன் நத்தம் எம்எல்ஏவாகவும் உள்ளனர். இருவரும் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டச் செயலர்களாகவும் பொறுப்பு வகிக்கின்றனர்.
ஆனால், இருவருக்கும் 75 வயதை கடந்துவிட்டதால், திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவுக்கு இணையாக களத்தில் இறங்கி அரசியல் செய்ய முடியாமல் போய்விட்டது. இதனால், மாவட்டத்தில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க: அதிமுக - பாஜ கூட்டணியில் புதிய கட்சி ஒண்ணும் இணைய போகுது! ட்விஸ்ட் வைக்கும் இபிஎஸ்!!! யார் அது?!
தேர்தலுக்கு முன்பாகவே இருவரின் கழக பதவிகளை மட்டும் வைத்துவிட்டு, மாவட்டச் செயலர் பதவிகளை பறிக்க பழனிசாமி முடிவு செய்திருந்தார். ஆனால், இது கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால் அந்த முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.

எனினும், சமீபத்தில் நடத்தப்பட்ட உள் கட்சி சர்வேகளில், திண்டுக்கல் மாவட்டத்தில் இப்போதைய நிலையில் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாது என்ற முடிவுகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சீனிவாசன் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவருக்கும் இம்முறை சீட் கொடுக்க வேண்டாம் என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், "இது எங்களின் கடைசி தேர்தல். இந்த ஒரு முறை மட்டும் சீட் கொடுங்கள்" என்று இருவரும் பழனிசாமியிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல, முன்னாள் சபாநாயகர் தனபால் (அவிநாசி), தாமோதரன் (கிணத்துக்கடவு), கந்தசாமி (சூலூர்) உள்ளிட்ட பல மூத்த தலைவர்களுக்கும் சீட் கொடுக்க விரும்பாத நிலைப்பாட்டில் பழனிசாமி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தனித்தொகுதிகளில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் பலருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவுகள் அதிமுகவின் உள் அமைப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே கட்சியில் பல மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த தேர்தலில் புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்று பழனிசாமி தரப்பு நம்புகிறது. ஆனால், மூத்த தலைவர்களை ஒதுக்குவது கட்சியின் அடித்தள வாக்காளர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் கட்சி வட்டாரங்களில் நிலவுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் நேருக்கு எதிராக இறுகும் பிடி?! ED கொடுத்த ஆதாரங்களை காட்டுங்க! டிஜிபிக்கு பறந்த உத்தரவு!