தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர் கடனை சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகள் அனைவருக்கும் ரூபாய் 25000 வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பருவ மழை துவங்குவதை முன்னிட்டு ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும், வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு தலா பத்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் தலைமையில் தவெக அரசை கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் விளமல் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர் -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டுக்கட்டாய கைது செய்தனர்.
இதையும் படிங்க: “புகார் கொடுங்க... நடவடிக்கை எடுக்கிறோம்...” - பதுக்கல் குறித்த கேள்விக்கு ஒரே போடாய் போட்ட உணவுத்துறை அமைச்சர்...!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர்கள் வீரமலை சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலையில் சாலை மறியல் போராட்டமானது நடைபெற்றது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தோகைமலை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சோழவந்தான், வாடிப்பட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து, பழுதடைந்த அரசு பேருந்தில் ஏற்றி அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஊர்வலமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடைந்து சாலை மறியலாக மாறியது. இந்த மறியல் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர். இதில் மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி பழைய பள்ளிவாசல் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேரு சிலை மும்முனை சந்திப்பு முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக தேனி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரியும் கண்டன கோசங்களை எழுப்பியவாறு 50-க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து நால்ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசாரால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் சாத்தூர் சாலையில் கருமாதி மடம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே மூலப்பாதை பகுதியில் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர், விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டோர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக முடிக்காத 40% பணி! 4 மாதங்களில் முடித்த தவெக! சென்னை மழைநீர் வடிகால் பணிகள் - செங்கோட்டையன் குற்றச்சாட்டு!