திருச்சி: 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேர்தல் பிரசாரம் பொங்கல் கொண்டாட்டத்துடன் தொடங்க உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகை தர உள்ளார். இதன் மூலம் பாஜகவும் அதன் கூட்டணியான அதிமுகவும் தீவிர பிரசாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.
ஜனவரி 4ஆம் தேதி புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் 'தமிழகம் தலைநிமிர் தமிழனின் பயணம்' என்ற யாத்திரையின் நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமித்ஷா பங்கேற்று உரையாற்ற உள்ளார். சுமார் 2 லட்சம் பேர் இதில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, ஜனவரி 5ஆம் தேதி காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அமித்ஷா செல்ல உள்ளார். பின்னர் காலை 11 மணியளவில் மன்னார்புரம் ராணுவத்திடலில் 'மோடி பொங்கல்' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏறக்குறைய 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கின்றனர். அமித்ஷாவுடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மேலிட பொறுப்பாளர்களும் கலந்துகொள்கின்றனர்.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? தமிழக காங்.,சில் கோஷ்டி மோதல்! விளாசும் நயினார் நாகேந்திரன்!
இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஜனவரி 5ஆம் தேதி திருச்சியில் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்பில் தொகுதிப் பங்கீடு, கூட்டணி விரிவாக்கம், தேர்தல் உத்திகள், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் இணைப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், 'மோடி பொங்கல்' விழாவிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவின் இந்த நிகழ்ச்சிகள் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை வெளிக்காட்டுவதாகவும், தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்துவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு கூச்சமாவே இல்லையா? தேர்தல் அறிக்கை குழு!! பொளந்து கட்டும் அண்ணாமலை!