திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மண்டல பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் நடைபெற்ற இந்த மாநாடு, தமிழகத்தில் பாஜகவின் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

பின்னர் மாநாட்டில் பேசிய அமித்ஷா, புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழக மக்களாகிய உங்களிடம் தமிழில் பேச முடியவில்லை, அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமிழக மண் வீரம், கலாச்சாரம் மிக்கது என்று கூறினார். மேலும் பாஜகவின் தேசிய மற்றும் மாநில அளவிலான கொள்கைகளை விளக்கினார். "தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய பாதைகள் திறக்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்," என்று அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: வெற்றி வியூகம் வகுக்க நெல்லை வரும் அமித் ஷா!! சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!!
ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதத்தின் முதுகெலும்பை நொறுக்கினார் பிரதமர் மோடி. பஹல்காமில் மதத்தின் பெயரால் நடந்த தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதத்தை வேரோடு அழிப்போம் என பிரதமர் மோடி உறுதி பூண்டார். தமிழ் மண், மொழி, மக்கள் மீது பற்று கொண்டவர் பிரதமர் மோடி. சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக இருப்பார்.
2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும். பாஜக - அதிமுக வெறும் அரசியல் கூட்டணி அல்ல. தமிழக மக்களை பாஜக - அதிமுக கூட்டணி மேம்படுத்தும். அமித்ஷா பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள என்.டி.ஏ கூட்டணி ஆட்சிதான் அமையும்.
மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, உள்கட்டமைப்பு மேம்பாடு, மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பாஜக அர்ப்பணிப்புடன் செயல்படும் எனவும் குறிப்பிட்டார். பூத் கமிட்டி உறுப்பினர்களை உற்சாகப்படுத்திய அமித்ஷா, "ஒவ்வொரு வாக்காளரையும் அணுகி, பாஜகவின் புரட்சிகரமான திட்டங்களை விளக்க வேண்டும். தமிழக மக்களின் நம்பிக்கையை வெல்ல உங்கள் உழைப்பு முக்கியம்," என்று அறிவுறுத்தினார். மேலும், மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் ஒருநாளும் தமிழ்நாட்டின் முதல்வராக வர முடியாது. முதல்வர் ஸ்டாலினின் ஒரே லட்சியம் தனது மகன் உதயநிதியை முதல்வராக்குவது தான் என்று கூறிய அவர், வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். நயினார், இம்மாநாடு தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். மாநாட்டில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள், உள்ளூர் தலைவர்கள், மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர், இது 2026 தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்தது. இந்நிகழ்வு, தமிழகத்தில் பாஜகவின் அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. அமித்ஷாவின் வருகை, கட்சியின் தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: நெல்லை ஆணவக்கொலை வழக்கு: உடந்தையாக இருந்த சுர்ஜித் சகோதரர் அதிரடி கைது..!!