கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாகத் தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும் திமுக பிரமுகருமான பிடி அரசகுமார் உள்படப் பலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இதில் பிடி அரசகுமார், அவரது உறவினர்களான ஆரோக்கிய ராஜ், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கின் வேகம் சூடுபிடித்தது.
இதனையடுத்து வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் முதலில் மனு தாக்கல் செய்தார். பின்னர் வழக்கில் முன்ஜாமின் கேட்டு மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: ரூ. 100 கோடி லஞ்சப் புகார்..! அன்பில் மகேஷ் முன்ஜாமின் தள்ளுபடி..! இடியை இறக்கிய ஹைகோர்ட்..!!

ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அன்பில் மகேஷுக்கு முதல் வகுப்பு சிறையில் அடைக்கவும், தரமான உணவு வழங்கவும் மற்றும் தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாகப் புழல் சிறைக்கு அன்பில் மகேஷ் அழைத்து வரப்பட்டபோது போலீஸ் வேனை வழிமறித்துத் தவெக அரசுக்கு எதிராகத் திமுகவினர் முழக்கமிட்டனர். மேலும் அவரைச் சிறைக்குள் அழைத்துச் செல்லவிடாமல் தடுத்தனர். போலீசார் திமுகவினரை அப்புறப்படுத்திவிட்டுச் சிறைக்குள் அன்பில் மகேஷை அழைத்துச் சென்றனர்.
அப்போது ஒருவர் “தைரியமாக இருங்க தலைவரே... நம்ம வெளியே வந்துவிடலாம்... தலைவரே அன்றைக்கே அவனை (முதலமைச்சர் விஜயை) கரூரில் வைத்துப் போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?” என ஆவேசமாகக் கூச்சலிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. விசாரணையில் அந்த நபர் வேலூர் மாவட்டம் 12ஆவது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் எனத் தெரியவந்தது.
தலைமறைவாக உள்ள டீட்டா சரவணனைப் போலீசார் தேடி வருகிறார்கள். அவர் மீது அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டும் தொனியில் பேசுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இப்போ தான் தெரியுதா கவர்னர் அதிகாரம்? லஞ்சப் புகார் வழக்கில் மகேஷுக்கு சிக்கல்? ஐகோர்ட் அதிரடி கேள்வி!!