சென்னை மயிலாப்பூரில் தினமலர் நேரலை ஏற்பாட்டில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், “இன்றைக்கு மிகத் தெளிவாக எல்லோரும் வெற்றி பெறப் போகிறோம். மே 4-ம் தேதிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்பார். கடந்த இரண்டு வாரங்களாக களத்தில் மிகப் பெரிய மாற்றத்தை நான் காண்கிறேன். தேஜா கூட்டணிக்கு ஆதரவாக ஒரு பெரிய அலை உருவாகி உள்ளது” என்றார்.
தென் தமிழகம், கொங்கு மண்டலம் மற்றும் டெல்டா பகுதிகளில் திமுகவுக்கு எதிராக மக்களின் கோபம் முழுமையாக வெளிப்படத் தொடங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பார்லிமெண்டில் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்ததால் பெண்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகவும் கூறினார்.
“களம் சிறப்பாக உள்ளது. திமுக வீழ்த்தப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஏப்ரல் 23-ம் தேதி நீங்கள் பார்ப்பீர்கள். தேஜா கூட்டணி வேட்பாளர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவார்கள்” என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் திமுக செய்யும் தில்லாலங்கடி!! அண்ணாமலை பகீர்!! அமாவாசை காலத்து டெக்னிக் என விளாசல்!

ராகுல் காந்தியும் முதலமைச்சர் ஸ்டாலினும் ஒரே மேடையில் நிற்கவில்லை என்றும், தனித்தனியாகப் பிரசாரம் செய்வதாகவும் அவர் விமர்சித்தார். போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறினார். “கோவில் வாசலில் தேங்காய் உடைத்தால் எப்படி சிதறுமோ, அதேபோல் திமுக கூட்டணி சிதறி உள்ளது” என்று உவமையுடன் பேசினார்.
தஞ்சையில் நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் அளித்த வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டினார். “விஜய் கொடுத்த வாக்குறுதிகளுக்கு 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டே 4.5 லட்சம் கோடி தான். இது பட்ஜெட்டைத் தாண்டிய தொகை” என்று கூறி, மக்கள் இதைப் பார்த்து முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இலவசங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மக்கள் வாக்குச் செலுத்தும்போது கடன் பிரச்னையைப் பற்றியும் யோசிக்க வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தினார்.
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் அண்ணாமலையின் இந்தத் தீவிரப் பிரசாரம் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை! அண்ணாமலை ட்விஸ்ட்! கடிதத்தில் சொன்ன பகீர் தகவலால் அதிர்ச்சி!!