மதுரை: ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என அதன் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்கான அமைப்பு பணிகள் வேகமெடுத்து வரும் நிலையில், பொதுச்செயலாளராக கரு. நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதைவிட, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
முதல்வர் விஜய் லண்டன் சென்றதை விமர்சிக்கும் நோக்கம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக சென்னையைத் தாண்டி கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தொழிலதிபர்களுடன் அரசு நேரடியாக கலந்துரையாட வேண்டும் என்றார். உற்பத்தியை அதிகரிக்கும் உள்ளூர் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஊக்கத்தொகை மற்றும் வரிச்சலுகைகளை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 2027-ல் புதிய அரசியல் கட்சியா? அண்ணாமலையின் அடுத்த நகர்வு! நாடாளுமன்ற தேர்தலுக்கு டார்கெட்!!

வெளிநாட்டு முதலீட்டை தேடிச் செல்வதைவிட, தமிழகத்துக்குள் ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழில்துறைக்கு ஆதரவு அளிப்பது முக்கியம் என்பது அண்ணாமலையின் கருத்தாக இருந்தது. குறிப்பாக கோவை, மதுரை போன்ற தொழில் நகரங்களின் பொருளாதார திறனை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் அரசியல் பயணம் குறித்தும் அண்ணாமலை முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த அமைப்பு அரசியல் இயக்கமாக மாறுவது உறுதி என்றும், அதற்கான கட்டமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்ததாக கூறிய அண்ணாமலை, தற்போது எதிர்பார்த்ததைவிட வேகமாக பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அதிகமான தலைவர்கள் உருவாக வேண்டும் என்றும், தொண்டர்கள் அரசியல் ரீதியாக பக்குவம் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பின்னர் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். பின்னர் அமைப்பின் அரசியல் நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம் எதிரொலி! தமிழக அரசுக்கு அண்ணாமலை வைத்த முக்கிய கோரிக்கை!