புதுச்சேரி குமரகுரு பள்ளப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 216 குடியிருப்புகளைப் பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் விழா இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு, பயனாளிகளிடம் குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார்.
புதுச்சேரி மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக, குமரகுரு பள்ளப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 216 புதிய குடியிருப்புகளைத் திறந்து வைக்கும் விழா இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை, துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்றனர்.
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, “நமது குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், எந்தப் பொறுப்பிற்குச் சென்றாலும் அந்தப் பதவிக்குப் பெருமை சேர்ப்பவர். தற்போது நாடாளுமன்ற மேலவையை அவர் மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவர் இறைவன்பால் கொண்டுள்ள அதீத பக்திதான் அவரை இந்த உயரிய நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சிக்காக அவர் எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறார்” எனப் பாராட்டிப் பேசினார்.
இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல்: பணப் பட்டுவாடாவுக்கு முற்றுப்புள்ளி! கண்காணிப்பை தொடங்கிய வருமான வரித்துறை!

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், “புதுச்சேரி மண்ணோடு எனக்கு இருக்கும் தொடர்பு இன்றும் தொடர்கிறது, அது என்றும் தொடரும். மகாகவி பாரதியார் இங்கு வாழ்ந்த 10 ஆண்டுகளில்தான் அவரது உன்னதமான படைப்புகள் உருவாயின. பிரதமர் மோடி அவர்கள் தமிழ் பண்பாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டவர். அதன் காரணமாகத்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் விரைவில் புதுச்சேரிக்கு வரவுள்ளார். அப்போது முதல்வர் ரங்கசாமி முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளும் நிச்சயம் செயல் திட்டங்களாக மாற்றப்படும்” என உறுதிபடத் தெரிவித்தார்.
இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜெயக்குமார், ஜான் குமார், திருமுருகன், லட்சுமி நாராயணன் மற்றும் செல்வ கணபதி எம்பி, திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திரளாகக் கலந்துகொண்டனர். குமரகுரு பள்ளப் பகுதியில் வீடு பெற்ற பயனாளிகள் குடியரசுத் துணைத் தலைவரிடம் இருந்து சாவிகளைப் பெற்றபோது நெகிழ்ச்சியில் காணப்பட்டனர்.
இதையும் படிங்க: துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பு! டிச. 29-ல் புதுச்சேரி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா: முக்கிய அறிவிப்பு வெளியீடு!