சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிடுவோருக்கு பீஹார் அரசு புதிய சன்மானத் திட்டத்தை அறிவித்துள்ளது. மாநில அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் குறித்து வீடியோ வெளியிடும் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஊடகப் படைப்பாளர்களுக்கு, அந்த வீடியோக்கள் பெறும் பார்வைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை சன்மானம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பீஹாரில் முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 13 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணைய ஊடகங்களுக்கான ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தங்களும் இடம்பெற்றுள்ளன.
புதிய நடைமுறையின்படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஊடகப் படைப்பாளர்கள் பீஹார் அரசின் நலத்திட்டங்கள், மக்கள் நலப் பணிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் குறித்து வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிடலாம். அந்த வீடியோக்கள் குறிப்பிட்ட அளவு பார்வைகளை பெற்றால், அதற்கேற்ப அரசு சார்பில் சன்மானம் வழங்கப்படும்.
இதையும் படிங்க: திரையுலகிற்கு பேரிழப்பு... நடிகை சவுகார் ஜானகி மறைவு.! முதல்வர் விஜய் இரங்கல்..!!
ஒரு வீடியோ வெளியிடப்பட்டு 30 நாட்கள் முடிந்த பின்னர் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஒரு லட்சம் பார்வைகளை பெற்ற வீடியோவுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பார்வைகள் அதிகரிக்கும் பட்சத்தில் சன்மானத் தொகையும் அதிகரிக்கும். அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், சமூக வலைதளத்தில் காட்டப்படும் பார்வை எண்ணிக்கையை மட்டும் வைத்து உடனடியாக பணம் வழங்கப்படாது. வீடியோ பெற்ற பார்வைகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட பின்னரே சன்மானத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை பொதுமக்களிடம், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இணையத்தை அதிகம் பயன்படுத்தும் தலைமுறையினரிடம் விரைவாக கொண்டு சேர்க்க முடியும் என அரசு கருதுகிறது.
அதேநேரத்தில், அரசு திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக சமூக ஊடக படைப்பாளர்களுக்கு அரசு பணம் வழங்குவது தொடர்பாக வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தின் தரம் குறித்த கேள்விகளும் எதிர்காலத்தில் எழ வாய்ப்புள்ளது. எந்த வகையான வீடியோக்கள் தகுதி பெறும், பார்வைகள் எவ்வாறு கணக்கிடப்படும், தவறான அல்லது செயற்கையாக அதிகரிக்கப்பட்ட பார்வைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும் என்பதற்கான விதிமுறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பீஹார் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: என் ஆளுங்க 3,000 பேர் இன்னும் இந்தியாவுல தான் இருக்காங்க! பாக்., பயங்கரவாதி ஷசாத் பாட்டி பரபரப்பு வீடியோ!