தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. இதற்கு மத்தியில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது என்றும் அரசியல் அல்லது கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ஆனால், பா.ஜ.க. வட்டாரங்களில் இருந்து வெளியாகி உள்ள தகவலின்படி, இந்தச் சந்திப்பில் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை நடந்துள்ளது.
குறிப்பாக, அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு செய்வது தொடர்பாக தீவிர விவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளின் பட்டியலை நயினார் நாகேந்திரன் அமித் ஷாவிடம் வழங்கியுள்ளார். இந்தப் பட்டியலில் மொத்தம் 65 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: 80 தொகுதி நம்ம கையிலதான்! கெத்து காட்டும் விஜய்! தவெகவினருக்கு உற்சாகம் கொடுத்த ரகசிய சர்வே!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற ஓட்டு விகிதம் மற்றும் தற்போது மக்களிடையே ஏற்பட்டுள்ள ஆதரவு எழுச்சியை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்ட தொகுதிகளே அதிகம் இடம்பெற்றுள்ளன.

கொங்கு மண்டலத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், ஒசூர், வால்பாறை, கிணத்துக்கடவு உள்ளிட்ட தொகுதிகளும், தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளித்தலை, மதுரை தெற்கு, தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
சென்னை பகுதியில் எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், தியாகராய நகர், வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்துமாறு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஜனவரி மாதம் முதல் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் அடிக்கடி தமிழகம் வர உள்ளனர். இம்முறை பா.ஜ.க.வை அதிக இடங்களில் வெல்ல வைப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2026 தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கை அதிகரிக்க இந்த ஆலோசனைகள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவை மிரட்டிப் பார்க்கும் காங்.,! டெல்லி மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு!! தமிழக காங்., அதகளம்!