தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவர் மாதம்தோறும் எடுத்துக்கொள்ளும் வழக்கமான உடல்நலப் பரிசோதனை தான். சென்னை கொளத்தூர் கபாலீசுவரர் கலைக்கல்லூரி விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
மேலும் அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மருத்துவ பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அதுமட்டுமின்றி கோவை, திருப்பூருக்கு நாளை செல்ல உள்ள நிலையில் வழக்கமான உடல் பரிசோதனை என்று தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரை 2 நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சரின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது.

மு.க. ஸ்டாலின், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு நுரையீரலில் லேசான சளி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நடைபெற்ற பரிசோதனை வழக்கமான உடல்நலக் கண்காணிப்பின் ஒரு பகுதியாகும், மேலும் எந்தவொரு அசாதாரண நிலையும் கண்டறியப்படவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அண்ணன் மு.க.முத்துவின் உடல் தகனம்.. கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த தம்பி ஸ்டாலின்..!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2021 முதல் பதவி வகிக்கும் ஸ்டாலின், தனது உடல்நலத்தை தொடர்ந்து கவனித்து வருகிறார். இதற்காக அவர் அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்கிறார். அவரது உடல்நலம் குறித்து பல தலைவர்கள் அவ்வப்போது விசாரித்து வருகின்றனர். முதலமைச்சரின் உடல்நலம் தமிழ்நாட்டு மக்களிடையே முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும் அவரது தொடர்ச்சியான பொதுச் சேவைக்கு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் மு.க ஸ்டாலின் வழக்கம்போல் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டதாகவும், அவர் கூறிய மருத்துவ அறிகுறிகள் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது.. சுதந்திர தினத்தன்று கௌரவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!