சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக கடந்த 10ம் தேதி பொறுப்பேற்ற த.வெ.க. தலைவர் விஜய், அரசு ஊழியர் போன்ற கட்டுப்பாட்டுடன் பணிக்கு வருவது அதிகாரிகள் மற்றும் போலீசாரிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதவியேற்பு விழா காலை 10 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், விஜய் காலை 8.48 மணிக்கே நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வந்து சேர்ந்தார். அடுத்த நாள் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழா காலை 9.30 மணிக்கு நடைபெற இருந்தது. இதில் பங்கேற்க விஜய் காலை 8.45 மணிக்கே தலைமைச் செயலகம் வந்துவிட்டார்.
12ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதல்வர் விஜய் 8.55 மணிக்கே சட்டசபைக்குள் நுழைந்தார். 13ம் தேதி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், அவர் காலை 9 மணிக்கே தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்து சேர்ந்தார். சபை தொடங்குவதற்கு சற்று முன்பாக 9.22 மணிக்கு தன் இருக்கையில் அமர்ந்தார்.
இதையும் படிங்க: தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை! புதிய முதலீடுகளை ஈர்க்க திட்டம்!

மூன்று நாட்கள் நடைபெற்ற சட்டசபைக் கூட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நேற்று தன் அன்றாடப் பணிகளை கவனிக்க முதல்வர் விஜய் காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலகம் வந்தார். மாலை 4 மணி வரை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை நடத்தினார். பின்னர் வீட்டுக்குப் புறப்பட்டார்.
முதல்வர் விஜய் தினமும் காலை தலைமைச் செயலகத்துக்கு வரும்போது மதிய உணவை கையோடு எடுத்து வருகிறார். அலுவலகத்திலேயே உணவருந்துவதைப் பார்த்து உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் அதிசயம் அடைந்துள்ளனர். பதவியேற்ற முதல் நாளில் இருந்து இன்று வரை தொடர்ந்து வரும் இந்த கட்டுப்பாடான பணி நேரம் மற்றும் ஒழுக்கம் அரசு இயந்திரத்துக்கே புதிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
அரசு ஊழியர்களைப் போலவே சரியான நேரத்துக்கு வந்து பணியாற்றும் முதல்வரின் இந்த அணுகுமுறை, அதிகாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றும் விஜய்யின் செயல்பாடு, தமிழக அரசியலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
முதல்வர் விஜய்யின் இந்த கடுமையான ஒழுக்கம் மற்றும் நேரத்துக்கு மதிப்பளிக்கும் பண்பு, அரசு நிர்வாகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!