நெல்லையில் நடைபெறும் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகப் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸுடன் வந்திருந்த கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா, தற்போதைய உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்துச் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “கூட்டணி ஆட்சி என்பது தற்போது ஒரு முக்கியப் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. ஒரு கட்சியைத் தோழர்களாக நடத்தாமல் வேலைக்காரர்களாக நடத்தும் போக்கு மாற வேண்டும். காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளே இப்போது கூட்டணி ஆட்சியை வெளிப்படையாகக் கோரத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில் கூட்டாட்சி என்ற வார்த்தையை முன்வைப்பது ஜனநாயக ரீதியாக ஒரு நல்ல நகர்வாகவே நான் பார்க்கிறேன்” என்றார்.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி நீக்கம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "நேற்று வரை நல்லவர்களாக இருந்தவர்கள் இன்று சில உளவியல் சிக்கல்களால் மாறுகிறார்கள். கட்சிக்குத் துரோகம் இழைப்பவர்களை நீக்குவதில் தவறு ஏதுமில்லை. அதேநேரம், நூற்றுக்கணக்கான புதிய உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கட்சியில் இணைந்து வருகிறார்கள். மருத்துவர் ஐயா (ராமதாஸ்) அன்புமணி அவர்களைப் பலமுறை பாராட்டியுள்ளார். தற்போது சில மோசமான சூழல்கள் மற்றும் துரோகங்களின் காரணத்தாலேயே அவர் அவ்வாறு பேசியிருக்கிறார். அன்புமணி இராமதாஸ் அவர்கள் அதிகாரத்திற்காகப் போராடவில்லை, தொண்டர்களுக்காகத் தன்னை இழந்து களத்தில் நிற்கிறார். தந்தை-மகன் இடையிலான இந்தச் சலசலப்பு நீண்ட காலம் நீடிக்காது" எனத் தெளிவுபடுத்தினார்.
மேலும், கூட்டணி குறித்துப் பேசிய அவர், “தமிழகத்தின் தலையெழுத்தைச் சரியாக எழுதும் வகையில் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வலிமையான கூட்டணியாக அது அமையும். திமுக கடந்த தேர்தலில் வென்றது அவர்களின் பலத்தினால் அல்ல, மற்ற கட்சிகளின் பலவீனத்தினால் தான். ஆனால் இன்று ஆசிரியர்கள், செவிலியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இந்த மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே பாமக-வின் முதன்மையான நோக்கம். கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தலைவர் விரைவில் அறிவிப்பார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் பொருளாதாரம்... அசாத்திய சாதனை..! மார்த்தட்டும் திமுக...!
இதையும் படிங்க: மக்களே லாஸ்ட் சான்ஸ்! இறுதிக்கட்டத்தை எட்டிய SIR பணிகள்! நாளை கடைசி நாள்!