கோவை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணிகளுக்கான டெண்டர் நடைமுறை தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஒப்பந்த காலம் முடிந்த சில பணிகளுக்கு புதிதாக டெண்டர் கோருவதற்கு பதிலாக, ஏற்கனவே பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கே காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்திய மாநகராட்சி கூட்டத்திலும் ஒப்பந்தங்களை தொடர்ந்து நீட்டிப்பது குறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் புவியியல் தகவல் மையம் மற்றும் அவுட்சோர்சிங் பணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மை பணியாளர் உள்ளிட்ட சேவைகள், சாலையோரங்களில் தேங்கும் மணல் மற்றும் குப்பைகளை அகற்றும் மினி டிப்பர் வாகனங்கள் போன்ற பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்கள் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில பணிகளுக்கு ஏற்கனவே பல முறை காலநீட்டிப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மை பணியாளர், ஆயா மற்றும் காவலர் உள்ளிட்ட 66 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட நிலையில், அந்த ஒப்பந்தம் பல்வேறு கட்டங்களில் நீட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சாலை மையத்தடுப்புகளில் தேங்கும் மணல் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிக்கான ஒப்பந்தமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கூட்டணி கட்சிகளின் நெருக்கடி அதிகரிப்பு! தனிப்பெரும்பான்மைக்கு விஜயின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

இதுகுறித்து அதிமுக கவுன்சிலர் குழுத் தலைவர் பிரபாகரன், ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகளுக்கு புதிய மதிப்பீடு தயாரித்து வெளிப்படையாக டெண்டர் கோருவதில் என்ன சிக்கல் என கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக காலநீட்டிப்பு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதே விவகாரம் தொடர்பாக மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் சிலர், ஒரே ஒப்பந்ததாரர்களுக்கு மீண்டும் மீண்டும் காலநீட்டிப்பு வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் ஒப்பந்தங்களை நீட்டிப்பது ஏன் என்றும் அவர்கள் கேட்டனர். இதற்கு மாநகராட்சி கமிஷனர், தொடர்ந்து காலநீட்டிப்பு வழங்குவது சரியான நடைமுறை அல்ல என்றும், தேவையான இடங்களில் புதிய டெண்டர் கோருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், கோவை மாநகராட்சியில் டெண்டர் நடைமுறை மற்றும் ஒப்பந்த காலநீட்டிப்பு விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் திட்டத்திற்கு தவெக செக்! செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி பணி ஆணை ரத்து! அரசு விளக்கம்!