"குறிப்பிட்ட சமூக மக்களிடம் வடகாடு முத்து மாரியம்மன் கோவில் தேரின் வடம் தொடும் உரிமை உள்ளது'' என விசிக தலைவர் திருமாவளவன் பேசி இருந்த நிலையில், வடகாடு, இருதரப்பினரிடையே மோதல் தொடர்பாக அவதூறு பரப்பியதாக அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் கடந்த 5 ம் தேதி இரவு கடைவீதியில் இரு தரப்பு இளைஞர்கள் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது. இதில், ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் குடியிருப்பிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதால் இரு தரப்பிற்கும் இடையே மோதலாக வெடித்தது. காவல்துறையினர் முன்னிலையிலேயே இரு தரப்பிலும் பலர் தாக்கப்பட்டு காயமடைந்தனர். இதில் ஒரு ஆள் இல்லாத வீடு, இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த மறுநாள், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “வடகாடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத் திருவிழாவில் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தேர் வடம் தொட்டு கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு தேரோட்டத்தில் வழக்கம் போல வடம் தொட்டு கொடுக்கச் சென்ற போது அவர்களை தாக்கி குடியிருப்பிற்குள்ளும் நுழைந்து வீடுகளை தீயிட்டு கொளுத்தி பலரை தாக்கி காயப்படுத்தி பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்'' எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் 'வீரவேல் வெற்றிவேல்' ஆபரேஷன்.. 2026 தேர்தலுக்காக நயினாரின் அதிரடி அறிவிப்பு!
இந்த சம்பவத்தில் திருமாவளவன் உண்மைக்கு புறம்பாக பேசி இரு பிரிவினரிடையே மேலும் பிரச்சனையை தூண்டிவிடுவதாக கூறி வழக்கமாக தேர் வடம் தொட்டுக் கொடுக்கும் சேர்வைகாரன்பட்டிகாரர்கள் வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த மனுவில் ‘வடகாடு முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் கடந்த 300 வருடமாக தேரோட்டத்தில் சேர்வைகாரன்பட்டி சேர்வை வகையறாக்களை சேர்ந்தவர்களே தேர் வடம் தொட்டுக் கொடுத்து வருகிறோம்.

அதே போலவே இந்த ஆண்டும் தேரோட்டத்தில் நடந்தது. ஆனால் வி.சி.க தலைவர் திருமாவளவன், தான் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்களை ஊடகங்களில் பேட்டியாகவும் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார். இதனால் எங்கள் பாரம்பரிய உரிமைக்கு கலங்கம் ஏற்படுத்துவதாகவும் உண்மைக்கு புறம்பான தகவலால் இரு தரப்பு மோதலை தூண்டிவிடுவது போலவும் உள்ளது. ஆகவே தவறான தகவலை பரப்பி அவதூறு செய்துள்ள திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த புகாரில் கூறியுள்ளனர்.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட வடகாடு போலீசார், உயர் அதிகாரிகளிடம் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். வடகாடு மோதல் விவகாரத்தில் இதுவரை ஒரு தரப்பில் 21 நபர்களும், மற்றொரு தரப்பில் 7 நபர்களும் என மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காவல்துறை அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்... வடகாட்டு பிரச்சனையில் பொங்கி எழுந்த திருமா!!