சென்னை, டிசம்பர் 13: 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து தமிழக காங்கிரஸில் கடும் குழப்பம் நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் புதிய கூட்டணி அமைப்பதா என்பதைத் தீர்மானிக்க, டில்லி மேலிடம் நாளை மறுதினம் (டிசம்பர் 15) 20 முன்னணி தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் தனித்தனியே கருத்து கேட்க திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோருடன் நடைபெறும்.
தவெக தலைவர் விஜயை சென்னையில் அவரது இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி சமீபத்தில் சந்தித்துப் பேசினார். ராகுல் காந்தியின் தூதராகச் சென்ற அவரிடம், “எங்கள் கொள்கைகளுக்கு ஏற்ற காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கத் தயார். கூட்டணி அமைத்தால் ஆட்சியில் பங்கு தருவோம்” என்று விஜய் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தமிழக காங்கிரஸில் திமுக ஆதரவு கோஷ்டியினர் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேலிடத்திற்கு புகார் அனுப்பினர். ஆனால், கட்சி மேலிடம் அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக, விஜயைச் சந்தித்தது குறித்து பிரவீன் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: விஜயுடன் ராகுலின் வியூக வகுப்பாளர் சந்திப்பு!! தவெக + காங்., கூட்டணி?! திமுகவுக்கு கல்தா கன்ஃபார்ம்!!

தமிழக காங்கிரஸில் இரு கோஷ்டிகள் உள்ளன. ஒரு பிரிவு திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மற்றொரு பிரிவு விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறது. இதனால் மேலிடத்திற்கு எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரிடம் சில நிர்வாகிகள், “ஆட்சியில் பங்கும் அதிக தொகுதிகளும் தந்தால் திமுக அணியில் நீடிக்கலாம். இல்லையென்றால் தவெக அணியில் இணையலாம். திமுகவுடன் இருந்தால் காங்கிரஸ் வளர்ச்சி பெறாது” என்று தெரிவித்துள்ளனர்.
நாளை (டிசம்பர் 14) டில்லியில் ஓட்டுத் திருட்டைக் கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் பேரணி நடைபெறுகிறது. அதில் தமிழக காங்கிரஸ் சார்பில் 1,000 பேர் பங்கேற்கின்றனர். நாளை மறுதினம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி விவகாரம் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் குழப்பம் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: 2026 தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! காய்களை கச்சிதமாக நகர்த்தும் ஸ்டாலின்!! மாஸ்டர் பிளான்!