தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு த.வெ.க.வின் கூட்டணி உத்திகள், அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவர் விரிவாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதலில், தன்னை தி.மு.க.வில் இணைவதாக பரவிய வதந்திகளை மறுத்த செங்கோட்டையன், “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எதிர்த்த தி.மு.க.வில் சேர்வது ஒருபோதும் நடக்காது. விஜய் ஒரு நல்ல தலைவராக இருப்பதால்தான் த.வெ.க. எனக்கு சிறந்த தேர்வாக அமைந்தது” என்று தெளிவுபடுத்தினார்.
விஜய்க்கு தற்போது 34 சதவீத வாக்கு ஆதரவு இருப்பதாகக் கூறிய அவர், த.வெ.க.வை தி.மு.க.வின் ‘பி’ டீம் என்று சொல்வது அர்த்தமற்றது என்றும், ஈரோடு மக்கள் சந்திப்பில் விஜய் தி.மு.க.வை ‘தீய சக்தி’ என்று அறிவித்ததை நினைவூட்டினார். காஞ்சீபுரத்தில் விஜய் அறிவித்த திட்டங்களே கொள்கைக்கு பதிலாக அமையும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எந்த கூட்டணிக்கு போகலாம்?! விஜய் வைத்த செக்! குழம்பி தவிக்கும் ஓபிஎஸ்! டிடிவி! பிரேமலதா!
தனது அரசியல் பயணம் குறித்து பேசிய செங்கோட்டையன், கூவத்தூர் நிகழ்வின்போது சசிகலா தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் பதவியை ஏற்க சொன்னதை மறுத்ததாகவும், அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க பா.ஜ.க.வுடன் பேசியது தோல்வியடைந்ததாகவும் கூறினார்.

“நான்தான் எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தினேன். அவரால் நீக்கப்பட்டதை நினைத்து 2 நாட்கள் தூங்காமல் அழுதேன். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி குறித்து பேசிய அவர், “காங்கிரஸ் இரண்டு முகமாக பிரிந்துள்ளது. அவர்கள் எந்த வழியில் செல்வார்கள் என்பதை கணிப்பது கடினம். ஆனால் ஒரு பிரிவினர் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள். எங்களுடன் பேசி வருகிறார்கள்” என்று அதிரடியாகத் தெரிவித்தார். இது த.வெ.க.வின் வாக்கு வங்கி வலிமையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம், 100 நாள் வேலை சட்டத்திருத்தம் போன்றவற்றுக்கு கருத்து தெரிவிக்காததால் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க விஜய் திட்டமிடுகிறாரா என்ற கேள்விக்கு, “த.வெ.க.வின் கொள்கை எதிரி பா.ஜ.க. என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார்” என்று உறுதியாகப் பதிலளித்தார். பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்ற கேள்விக்கு, “அது தலைவர்களின் மனநிலையைப் பொறுத்தது” என்று தெரிவித்தார்.
த.வெ.க. தலைவர் விஜய்யின் தலைமையில் கட்சி வளர்ச்சியடைந்து வருவதாகவும், தேர்தலில் வலுவான போட்டியாளராக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையையும் செங்கோட்டையன் வெளிப்படுத்தினார். இந்த பேட்டி தமிழக அரசியலில் புதிய கூட்டணி சாத்தியங்களை வலுப்படுத்தியுள்ளது. த.வெ.க. தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்பது அடுத்த சில வாரங்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக வேணவே வேணாம்! விஜய் கூட பரவாயில்லை!! ராகுல்காந்திக்கு காங்கிரசார் எழுதிய கடிதம்!