சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியைத் தவிர்த்து, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு விரிவான கடிதம் அனுப்பியுள்ளனர். இந்தக் கடிதம் கட்சியின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
கடிதத்தில் திமுக கூட்டணியைத் தொடர்வதால் ஏற்படும் பாதிப்புகளை விரிவாக விளக்கியுள்ளனர். திமுகவின் ஹிந்துத்துவா எதிர்ப்பு மற்றும் சனாதன தர்ம எதிர்ப்பு கொள்கைகள் வட மாநிலங்களில் காங்கிரஸுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.
இதனால் காங்கிரஸ் கட்சியும் ஹிந்து விரோத கட்சியாக சித்தரிக்கப்படுவதால், பாஜகவுக்கு எதிர்ப்பு பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு கிடைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு நிலைப்பாடு வட மாநில ஹிந்தி பேசும் மக்களிடையே காங்கிரஸுக்கு எதிரான உணர்வை ஏற்படுத்தி, தேர்தல் ஓட்டு வங்கியை இழக்கச் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? யாருடன் கூட்டணி!! ராகுல் காந்தி முடிவு என்ன? டெல்லியில் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை முன்பைவிட அதிகரித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொடர்வது காங்கிரஸின் வெற்றி வாய்ப்புகளை மேலும் குறைக்கும் என எச்சரித்துள்ளனர்.

கட்சியில் ஒருசில மூத்த தலைவர்களைத் தவிர, மற்ற அனைத்து மட்டங்களிலும் உள்ளவர்கள் திமுகவுடன் இருப்பதால் ஏற்படும் அவமான உணர்வால் வெளியேற விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸுக்கு பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருப்பதற்கு திமுக அடிமட்ட அளவில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டாதது தான் காரணம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மறுபக்கம் தவெகவுடன் கூட்டணி அமைப்பதால் கிடைக்கும் பலன்களையும் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். சமீபத்திய சர்வேக்களில் விஜய்யின் செல்வாக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அவரை திமுகவுக்கு மாற்றாக பார்க்கின்றனர்.
தே.ஜ. கூட்டணியை மூன்றாவது இடத்திற்கு தள்ளும் அளவுக்கு தவெக வளர்ந்துள்ளது என சர்வே அறிக்கைகள் கூறுகின்றன. தினகரன், பன்னீர்செல்வம் போன்ற அ.தி.மு.க. தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதால், அவர்களின் ஆதரவு தவெகவுக்கு கிடைத்தால் அ.தி.மு.க.வில் இருந்து பெரும் பிரிவினை ஏற்படும். இது தவெக - காங்கிரஸ் கூட்டணியை மிகவும் வலுவானதாக மாற்றும்.
இந்தக் கடிதம் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். காங்கிரஸ் மேலிடம் இதை எப்படி கையாளப் போகிறது என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது தவெகவுடன் புதிய பாதையில் செல்வதா என்பது இனி சில நாட்களில் தெளிவாகும்!
இதையும் படிங்க: 50 தொகுதி, துணை முதல்வர், அமைச்சர் பதவி!! தவெகவுடன் கூட்டணி வைக்க டெல்லி செல்லும் காங்., குழு!