தமிழகத்தின் பின்னலாடை நகரமான திருப்பூரில் பதுங்கியிருந்த பயங்கரவாத ஆதரவாளர்கள் 6 பேரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் நள்ளிரவில் நடத்திய அதிரடி வேட்டையில் கைது செய்துள்ளனர். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் நடத்தப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் டெல்லியில் குடியரசு தினத்திற்கு முன்னதாக, பாகிஸ்தான் ஆதரவு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தச் சதிச் செயலில் தொடர்புடையவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பயங்கரவாத ஆதரவுப் பதிவுகள் திருப்பூரிலிருந்து பகிரப்பட்டதை ஐ.டி (IT) பிரிவினர் கண்டறிந்தனர்.

டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் நேற்று திருப்பூருக்கு வருகை தந்து, உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து ரகசியத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். திருப்பூரின் மூன்று முக்கிய இடங்களான ஊத்துக்குளியில் 2 பேர், பல்லடத்தில் 3 பேர் மற்றும் திருமுருகன்பூண்டி பகுதியில் ஒருவர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: மார்ச்சில் மட்டுமே 3 முறையாம்..!! தமிழகம் வரும் பிரதமர் மோடி..!! பக்கா பிளான்..!!
கைதான மிஜானுர் ரகுமான், முகமது சபாத் உள்ளிட்ட 6 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் முறையான பாஸ்போர்ட் அல்லது விசாக்கள் இல்லை. திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வேலை பெறுவதற்காக இவர்கள் போலி ஆதார் கார்டுகளைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையின் போது இவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சிம் கார்டுகள் மூலம் அவர்கள் சர்வதேச அளவில் பயங்கரவாதச் சங்கிலியுடன் தொடர்பில் இருந்தார்களா என்பது குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் திருப்பூரில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக டெல்லி போலீசார் அவர்களை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

திருப்பூரில் கடந்த காலங்களிலும் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த வங்கதேசத்தினர் சிக்கியிருந்தாலும், தற்போது பயங்கரவாதத் தொடர்பின் அடிப்படையில் நடைபெற்றுள்ள இந்தக் கைது நடவடிக்கை உளவுத்துறையினரை உஷார்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காலநிலை உச்சி மாநாடு 4.0: பசுமை தமிழகத்தை நோக்கி 5 முக்கிய திட்டங்கள் அறிவிப்பு!