திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக சார்பில் வெளிமாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுகவின் பல்வேறு மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். வரும் அக்டோபர் 6-ம் தேதி தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி, செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ், கீதா ஜீவன், முத்துசாமி, தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், பெரியகருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு, தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். இந்த இடைத்தேர்தல் இயற்கையான காரணத்தால் உருவானது அல்ல என்றும், குதிரை பேரத்தின் காரணமாக தேர்தல் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், ஆளும் தரப்பு அளித்த வாக்குறுதிகள் தொடர்பாகவும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நிர்வாகிகளிடம் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தாராபுரத்தில் தவெக வேட்பாளர் கார் தாக்கப்பட்ட விவகாரம்! பானுமதி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 9 பேர் மீது வழக்கு!
மேலும், ஒவ்வொரு நிர்வாகியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும், வேட்பாளர் மட்டும் களத்தில் இறங்கி பிரசாரம் செய்யும் அணுகுமுறை திமுகவில் இருக்காது என்றும் நேரு தெரிவித்தார். கட்சியின் அனைத்து தொண்டர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் நேரு, தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவதாகவும், அவருக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தனர். சுகன்யா வேட்பாளராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் செப்டம்பர் 15-ம் தேதி வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார்.
சுகன்யா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையையும் இருவரும் தெரிவித்தனர். அதேநேரத்தில், கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா பதவியை ராஜினாமா செய்து தற்போது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டி, அவரை கடுமையாக விமர்சித்தனர்.
தாராபுரம் தொகுதியில் தற்போது திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களத்தில் இருப்பதால் போட்டி பலமுனையாகியுள்ளது. திமுகவின் இந்த ஆலோசனைக் கூட்டம் மூலம் தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: “இடைத்தேர்தலில் எங்களுக்குத் தான் ஓட்டு...” - ஒரே பாயிண்ட்டில் அதிமுக, தவெக ஜோலியை முடித்த கே.என்.நேரு...!