தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தாராபுரம் தொகுதியில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரி வருவதாக அமைச்சர் கூறினார். இதுவரை 9 அமைப்புகளை சந்தித்துள்ளதாகவும், அந்த அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களுக்கு முழுமையான ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தற்போதைய ஆட்சியில் தங்களிடம் லஞ்சம் அல்லது பணம் கேட்கப்படவில்லை என பல்வேறு தரப்பினர் கூறியதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
தமிழக முதல்வர் விஜய் குறித்து மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வடமாநிலங்களைச் சேர்ந்த சிலரும் தமிழக முதல்வர் போன்ற தலைமை தங்களுக்கு வேண்டும் என்று கூறுவதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாராபுரத்தில் திமுக போட்ட மாஸ்டர் பிளான்! சுகன்யா வெற்றிக்காக களமிறங்கும் படை.! இது மு.க.ஸ்டாலின் அசைன்மென்ட்!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் விஜயின் வெளிநாட்டு பயணம் குறித்து தெரிவித்த விமர்சனம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி குறித்து தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். மேலும், “நான் அவரிடம் இருந்து பிரிந்து வந்தவன்” எனக் குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
மேலும், அதிமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி ஓராண்டில் மீண்டும் முதலமைச்சராக வருவார் என கூறியிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், தற்போது மூன்றாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வந்தால் அந்த இடத்தையும் இழக்க நேரிடும் என்று கூறினார்.
திமுகவினர் இடைத்தேர்தலில் தவெக அளித்த வாக்குறுதிகள் மற்றும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பி வாக்கு சேகரிக்கப் போவதாக கூறியிருப்பது தொடர்பாகவும் அமைச்சர் பதிலளித்தார். மக்கள் திமுகவை ஏற்கனவே நிராகரித்துவிட்டதாகவும், தொடர்ந்து இதேபோன்று பேசினால் எதிர்க்கட்சி நிலையிலும் இருப்பார்களா என்பது தெரியாது என்றும் செங்கோட்டையன் விமர்சித்தார்.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்தியபாமா போட்டியிடுகிறார். அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தல், தவெக எதிர்கொள்ளும் முக்கியமான தேர்தல் போட்டிகளில் ஒன்றாக கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தாராபுரத்தில் தவெக வேட்பாளர் கார் தாக்கப்பட்ட விவகாரம்! பானுமதி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 9 பேர் மீது வழக்கு!