அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து நீக்கிய பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் (இ.பி.எஸ்.) முடிவை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அ.ம.மு.க.) பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"இ.பி.எஸ். துரோகத்துக்கு நோபல் பரிசு பெறும் தகுதி உள்ளவர். அவர் கட்சியின் அடிப்படை விதிகளை மாற்றி, ஹிட்லரைப் போல செயல்படுகிறார். 2026 தேர்தலில் தென்மாவட்ட மக்கள் அவருக்கு மிகப்பெரிய தோல்வியை பரிசாக அளிப்பார்கள்" என்று தினகரன் நேரடியாக எச்சரித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.), சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்தது இ.பி.எஸ்.வின் கோபத்தைத் தூண்டியது. இந்த நீக்கம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அதிமுகவின் உள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சதி என்று தினகரன் கூறி, அ.ம.மு.க.வின் 'ஒற்றுமைக்கான' அழைப்பை மீண்டும் உணர்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: எலெக்ஷன் வரைக்கும் எதையும் மாத்தாதீங்க!! மாவட்ட காங்., தலைவர்கள் போர்க்கொடி!
அக்டோபர் 30 அன்று பசும்பொன்னில் நடந்த முத்துராமலிங்க தேவர் குருபூஜையில், செங்கோட்டையன் ஓ.பி.எஸ்., தினகரன் ஆகியோருடன் ஒரே காரில் பயணித்தது சர்ச்சையானது. அடுத்த நாளே (அக்டோபர் 31) இ.பி.எஸ். செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார். செப்டம்பரில் செங்கோட்டையன், இ.பி.எஸ்.வுக்கு 10 நாள் கெடு கொடுத்து, ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
"ஒருங்கிணைந்த அதிமுக மட்டுமே 2026ல் வெற்றி பெறும்" என்று அவர் சொன்னது, கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தை மீறியதாகக் கருதப்பட்டது. இ.பி.எஸ்., "6 மாதங்களாக செங்கோட்டையன் கட்சிக்கு எதிராக செயல்பட்டார். ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா போன்ற நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்தது துரோகம்" என்று விளக்கினார். செங்கோட்டையன், "50 ஆண்டு உழைப்புக்கு பின் இது வலி தருகிறது. துரோகத்துக்கான நோபல் பரிசுக்கு இ.பி.எஸ். தகுதியானவர்" என்று பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், நவம்பர் 1 அன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், இ.பி.எஸ்.வின் முடிவை "கொள்ளிக்கட்டையால் தலையை சொறிவது" என்று சாடினார். "செங்கோட்டையன் ஜெயலலிதாவுக்கு விசுவாசமானவர். நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்ட பிறகே ஜெ. ஒப்புதல் அளிப்பார். பசும்பொன்னுக்கு சென்றது அரசியல் நிகழ்ச்சி அல்ல, தேவர் மரியாதை. அதிமுகவுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் செங்கோட்டையன் ஈடுபடவில்லை" என்று தினகரன் விளக்கினார்.
"முதலமைச்சராக்கிய சசிகலாவை நீக்கிய துரோகி இ.பி.எஸ். தான். ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், என்னைப் பார்த்து துரோகி என்பது சிரிப்பை தருகிறது. யாரையும் துரோகி என சொல்ல தகுதியில்லாதவர் இபிஎஸ். செங்கோட்டையன் சொன்னது போல, துரோகத்துக்கு நோபல் பரிசு இ.பி.எஸ்.வுக்கு தான்" என்று அவர் கிண்டலடித்தார்.
தினகரன், இ.பி.எஸ்.வின் தலைமையை "ஹிட்லர் போன்றது" என்று விமர்சித்து, "அவர் கட்சி விதிகளை மாற்றி உள்ளதாகவும், இரட்டை இலை பலவீனமடையும் என்றாலும் பதவிக்காக அடம் பிடிக்கிறார் என்றும் கூறினார். தகுதியில்லாதவர் மூத்த தலைவரான செங்கோட்டையனை நீக்குவதா? அவர் அழிவைத் தேடுகிறார்" என்று சாடினார்.
2021 தேர்தலில் தி.மு.க.வின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்ததால் தான் துரோகி என்று கேள்வி எழுப்பி, "அதிமுகவை தி.மு.க.வுக்கு கொடுத்த இ.பி.எஸ். தான் DMKவின் B-டீம். 2026ல் அவர் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கப் போகிறார்" என்று எச்சரித்தார்.
தென்மாவட்டங்களில் (ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி) தேவர் சமூகத்தின் ஆதரவை செங்கோட்டையன், ஓ.பி.எஸ்., தினகரன் ஆகியோர் பெறுவதால், அங்கு இ.பி.எஸ்.வுக்கு தோல்வி உறுதி என்று தினகரன் கூறினார். "பசும்பொன் நிகழ்ச்சியில் செங்கோட்டையனை நீக்கிய எ.பி.எஸ். முடிவை தென்மாவட்ட மக்கள் அவமானமாகக் கருதுவார்கள்" என்று அவர் சொன்னார்.
இதையும் படிங்க: சவுதியில் இந்தியர் சுட்டுக்கொலை! உடலை தாயகம் கொண்டுவர தீவிர நடவடிக்கை!