அதிமுக- பாஜக கூட்டணி தேர்தலுக்கு ஒருவருடத்திற்கு முன்பே அமைந்துவிட்டதால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
‘நாங்கள் அதிமுக கூட்டணிக்கு சென்றுவிடுவோம்… எடப்பாடி பழனிசாமி எங்களுக்காக கதவை திறந்து வைத்திருக்கிறார்’ என்று விசிக, கம்யூனிஸ்டுகள் உள்பட காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் முன்பு கூறிவந்தன.

ஆனால், தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்து விட்டதால், ‘பாஜக எதிர்ப்பை மட்டுமே வைத்து அரசியல் செய்யும்’ திமுக கூட்டணிக் கட்சிகள் தற்போது அதிமுக கதவு எங்களுக்காக திறந்திருக்கிறது என்று சொல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவெகவிற்கு எத்தனை சதவீதம் வாக்குகள் இருக்கிறது என்பது தெரியவில்லை. தவிர, இத்தனை ஆண்டுகாலம் பழமையான அரசியல் கட்சிகள் திடீரென்று நேற்று ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணையவும் முன் வர மாட்டார்கள்.
இதையும் படிங்க: மிரட்டல், உருட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது! பாஜகவை நேரடியாக தாக்கிய வைகோ..!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே முரண்பாடுகள் எழுவது தமிழ்நாடு அரசியலில் அவ்வப்போது நிகழ்வது வாடிக்கை. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது முரண்பாடுகள் பல காரணங்களால் எழுகின்றன. தொகுதிப் பங்கீடு, கொள்கை வேறுபாடுகள், மாநில மற்றும் மத்திய அரசியல் உத்திகள், உள்ளூர் அரசியல் நலன்கள் இதில் அடங்கும்.

தேர்தல்களில் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளிடையே அடிக்கடி உரசல்கள் ஏற்படுகின்றன. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் திமுகவுடன் நீண்டகால கூட்டணியில் இருந்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தாமதமானதாகவும், காங்கிரஸுக்கு எதிர்பார்த்ததை விட குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
விசிக தலைவர் திருமாவளவன், கூட்டணி அரசு அமைப்பது குறித்து 2024-ல் பேசியபோது, இதற்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை என்று கூறி, திமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டார். ஆனால், விசிகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, கூட்டணி அரசு குறித்து பேசியதால், கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இது கூட்டணிக்குள் உரசல்களை வெளிப்படுத்தியது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் (சிபிஐ, சிபிஎம்) கூட்டணி அரசில் பங்கேற்பதை எதிர்க்கின்றன. சிபிஎம் மாநிலச் செயலாளர் பி.சண்முகம், கூட்டணி அரசில் பங்கேற்க மாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறினார். இது திமுகவுடன் கொள்கை அடிப்படையில் முரண்பாடு இருப்பதைக் காட்டுகிறது. ஆனாலும் தேர்தல் உத்தி காரணமாக கூட்டணி தொடர்கிறது.
திமுகவின் திராவிடக் கொள்கைகளுக்கும், காங்கிரஸின் தேசியவாத அணுகுமுறைக்கும் இடையேயான முரண்பாடுகள், மாநில உரிமைகள், மொழி ஆதிக்கம் போன்ற விஷயங்களில் தெளிவாக வெளிப்படுகின்றன
.
திமுகவின் ஆதிக்கம் காரணமாக, கூட்டணிக் கட்சிகள் தங்களின் தனித்துவத்தையும் செல்வாக்கையும் உயர்த்த முயற்சிக்கின்றன. விசிக, மதிமுக போன்ற கட்சிகள், தங்களது கட்சி சின்னங்களில் போட்டியிடுவதற்கு முயற்சிக்கிறது. ஆனால், திமுக இதனைக் கட்டுப்படுத்துகிறது.
திமுக, மத்தியில் பாஜக அரசுடன் மோதலை தவிர்க்கும் உத்தியை 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கையாண்டது. இது கூட்டணிக் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. விமான நிலைய தனியார் மயமாக்கல் குறித்து முன்பு எதிர்ப்பு தெரிவித்த திமுக, பின்னர் அதற்கு ஆதரவாக நிலம் ஒதுக்கியது. இது காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளிடையே அதிருப்தியை உருவாக்கியது.
இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளில் திமுகவின் ஆதிக்கம், காங்கிரஸுக்கு எதிராக விமர்சனங்களை எழுப்பியது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும், புதுச்சேரியில் ஒரு தொகுதியையும் வென்றது. இது கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தியது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, கூட்டணிக் கட்சிகளிடையே உரசல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே முரண்பாடுகள் இருந்தாலும், தேர்தல் வெற்றிகளுக்காகவும், பாஜக மற்றும் அதிமுகவுக்கு எதிரான பொது எதிரியை எதிர்கொள்வதற்காகவும் இந்தக் கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ஆனால் தொகுதிப் பங்கீடு, அதிகாரப் பகிர்வு, கொள்கை வேறுபாடுகள் போன்றவை தேர்தலுக்கு முன்பே மேலும் பதற்றங்களை ஏற்படுத்தலாம். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது, இந்த முரண்பாடுகளை திமுக எப்படி கையாளுகிறது என்பது கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்.
இந்நிலையில்தான், ‘நாங்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு போட்டியிடுங்கள்’ என திமுக தலைமை கூட்டணி கட்சிகளிடம் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசியல் விமர்கர்கள், ''திமுக கூட்டணி உடையும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இதை வைத்தே திமுக கூட்டணியில் அதிக இடங்களையும், அதிக ஸ்வீட் பாக்ஸ்களையும் வாங்கி விடலாம் என கணக்குப் போட்டு காய்நகர்த்தியது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள். இந்நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துவிட்டது.

கடந்த காலங்களில் தேர்தல் நெருக்கம் வரை கூட்டணி கணக்குகள் மாறிக்கொண்டே இருக்கும். அதனால் சிறிய கட்சிகள் பேர வலிமையின் மூலம் கூடுதல் தொகுதிகளை பெறும் சூழல் இருந்தது. தற்போது தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக- பாஜக கூட்டணி அமைந்துவிட்டது. இதனால், பாஜக-வை எதிர்க்கும் கட்சிகளால் அதிமுக பக்கம் இனி செல்லவே முடியாது. எனவே வழக்கம் போல திமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டு அமைதியாக போக வேண்டிய சூழலே இம்முறையும் உருவாகியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வருவதை தடுக்க, கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு நில்லுங்கள் என இம்முறையும் தோழமைக் கட்சிகளுக்கு திமுக சமாதானம் சொல்லும். எனவே, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு பேரம் பேச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது’’ என்கின்றனர்.
இதையும் படிங்க: கமலுக்கு எம்.பி. பதவி.. வைகோவுக்கு உண்டா.? கிடைக்காவிட்டால் மதிமுக என்ன செய்யும்.. வைகோ அதிரடி!