சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதலியார் சமுதாய ஓட்டுகளை தக்க வைக்கும் வகையில் தி.மு.க., 14 தொகுதிகளில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இது கடந்த 2021 தேர்தலை விட ஐந்து அதிகம்.
தி.மு.க.,வைத் தொடங்கிய அண்ணாதுரை, நெடுஞ்செழியன், மதியழகன், நடராஜன் உள்ளிட்டோர் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் இந்த சமுதாய மக்கள் பெரும்பாலும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். தமிழகத்தின் 12 வட மாவட்டங்களில் உள்ள 69 தொகுதிகளில் முதலியார் ஓட்டுகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.
இந்த முறை தி.மு.க., நடத்திய சர்வேயில் முதலியார் சமுதாய ஓட்டுகள் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.,) மற்றும் பாஜகவுக்கும் செல்லும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்தது. இதைத் தடுக்கும் நோக்கில் தி.மு.க., முதலியார் சமுதாயத்துக்கு அதிக வாய்ப்பு அளித்துள்ளது.
இதையும் படிங்க: உயிர் நண்பர்களை மோத விட்ட உதயநிதி ஸ்டாலின்!! கார்த்திக் - ஆதவ் அர்ஜூனாவுக்கு போட்ட தரமான ஸ்கெட்ச்!!
சென்னை அண்ணா நகர், தாம்பரம், ஆலந்தூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், ஆற்காடு, கலசப்பாக்கம், கும்பகோணம், சங்கராபுரம், மதுரை மத்தி, வேலூர், திருப்பத்தூர், தி.நகர், திருக்கோவிலூர் ஆகிய 14 தொகுதிகளில் முதலியார் சமுதாய வேட்பாளர்களை தி.மு.க., களமிறக்கியுள்ளது.

முதலியார் சங்கங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யும் திட்டத்தையும் தி.மு.க., தயாரித்துள்ளது. முதலியார் சமுதாயத்தினர், “தி.மு.க., எங்களுக்கு 14 சீட் கொடுத்துள்ளது. ஆனால் அதிமுகவில் வெறும் 7 பேருக்கே வாய்ப்பு அளித்துள்ளது” என்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதேபோல், தமிழகத்தில் தெலுங்கு பேசும் சமுதாயத்தினரின் ஓட்டுகளை இழுக்கும் நோக்கில் தி.மு.க., 15 தெலுங்கு பேசும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த இரு சமுதாயங்களின் ஓட்டுகளும் தி.மு.க.,வுக்கு மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
தி.மு.க.,வின் இந்த உத்தி வட மாவட்டங்கள் மற்றும் தெலுங்கு பேசும் பகுதிகளில் கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் என்று கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன. முதலியார் சமுதாய மக்களிடையே “அண்ணாதுரை பாரம்பரியத்தை தி.மு.க., தொடர்ந்து காப்பாற்றி வருகிறது” என்ற பிரசாரமும் தீவிரமடைந்துள்ளது.
இந்தத் தேர்தலில் முதலியார் மற்றும் தெலுங்கு பேசும் சமுதாய ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு எந்த அளவுக்கு சாதகமாக அமையும் என்பது அடுத்த சில வாரங்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: துரைமுருகனின் தேர்தல் சென்டிமெண்ட்!! கடவுள் மறுப்பு கொள்கை Vs நவக்கிரக விநாயகர் வழிபாடு!!