சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிதம்பரம் சின்னக்கடை தெருவில் தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிதம்பரம் நகர திமுக செயலாளரும், நகர்மன்றத் தலைவருமான கே.ஆர். செந்தில்குமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவரும், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசியதாவது: சிதம்பரம் நடராஜரின் ஊர். சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் சண்டை வந்தபோது பார்வதியை எரித்து விட்டு, பின்னர் தன் உடலில் சரி பாதியை அவருக்கு கொடுத்தவர் சிவபெருமான். அதுபோல் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடத்தை பெண்களுக்கு கொடுத்தவர் நம் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த சாதனையை சாதித்தது திராவிட மாடல் ஆட்சி. கோயமுத்தூரில் சிவராத்திரி நிகழ்ச்சி நடந்தது. அதில் தியாகராஜர் பாட்டை போட்டுவிட்டு, சமந்தா, தமன்னா, ஐயா எல்லோரும் ஆடினார்கள். சந்தோஷமாக ஆடட்டும். ஆனால் அதே தியாகராஜ பாகவதரின் பேரன் வறுமையில் வாடுகிறார் என்று தெரிந்து அவர்களை அழைத்து,10 பத்து லட்சம் நிதி தந்து, வீடும் வழங்கியவர் நம் ஸ்டாலின்.
எடப்பாடி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். 20 லட்சம் மடிக்கணிகள் கொடுத்து விட்டு மாணவர்களை திருப்திப்படுத்தி விட்டார் ஸ்டாலின். ஆனால் ஓய்வூதியம் தரவில்லை அரசு ஊழியர்கள் கோபமாக இருக்கிறார் என்று பேசுகிறார். அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை அளித்து அவர்களது நெஞ்சில் பாலை வார்த்தவர் நம் முதல்வர். நான் வந்தால் 2000 ரூபாய் கொடுப்பேன். ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் அளிப்பேன் என்கிறார் எடப்பாடி. பெண்களுக்கு 125 நாள் வேலை என்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால், முதல் இரவு நேரத்தில் நிறைய பழம், மிச்சர் வாங்கி வைப்பார்கள். யாராவது அதை தின்பார்கள். எல்லாம் வாங்கி வைக்கிறார்கள் என்று ஒருவன் பலாப்பழத்தை வாங்கி வைத்தான். எடப்பாடி அதுபோலத்தான்.
எதை அறிவிப்பது என்று தெரியாமல் முழி பிதுங்கி இருக்கிறார். காரைக்காலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தார். தமிழ் படிக்காமல் விட்டு விட்டதற்கு தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார். என்ன நாடகம் இது. தமிழ் படிக்காவிட்டாலும் பரவாயில்லை. அந்த தமிழைப் படிக்கும் மாணவர்களுக்கு உரிய நிதியை ஒதுக்கினால்தான் உண்மையிலேயே தமிழ் மீது பற்று என்று நினைப்போம். அவருடைய குருநாதர் மோடி வந்தார். அவர் இவருக்கு மேல் நடிகனோ நடிகன். எங்கு சென்றாலும் திருக்குறளை சொல்வார். அதைப் பார்த்து திருவள்ளுவர் அழுகிறார். விவசாயிகள் மாநாட்டில் திருக்குறள் பேசுகிறார். இன்று விவசாயிகளை கொண்டு சென்று ட்ரம்பிடம், கார்ப்பரேட் முதலாளியிடம் அடகு வைத்தவர்தான் மோடி. ஆனால் எங்கள் வேளாண்மைத்துறை அமைச்சர் 66 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கி வாழ்க்கையை காப்பாற்றியவர்.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செஞ்சீங்களா? திமுக என்ன சாதிச்சது? இபிஎஸ் சரமாரி கேள்வி..!
வேளாண்மையையும், அறிவியலையும் இணைத்து வேளாண்மையில் ஒரு மாபெரும் புரட்சியை செய்தவர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிச்சாமி, மோடி கூட்டணி என்.டி.ஏ கூட்டணி. அது நேஷனல் டெமாக்ரடிக் அலையன்ஸ் இல்லை. அதற்கு நான் வைத்துள்ள பெயர் நேஷனல் டிசாஸ்டர் அலையன்ஸ். இந்த நாட்டை பேரழிவிற்கு உண்டாக்கக்கூடிய கூட்டணிதான் என்டிஏ. இன்னொரு பேரும் வைத்திருக்கிறேன். நேஷனல் டிசீவர் அலையன்ஸ். துரோகிகளின் கூட்டணி. எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அம்மா, சின்னம்மா என்று இருந்தவர் அங்கு சேர்களுக்கு மத்தியில் மலைப்பாம்பு போல் ஊர்ந்து சென்று அழுதபோது அந்த அம்மா நம்பி விட்டது. எடப்பாடி பழனிச்சாமிதான் உண்மையான தொண்டன் என்று கூறினார். பின்னர் வச்சதுதான் துரோகம். டிடிவி தினகரன் அம்மாவுக்கு துரோகம் செய்து, கட்சியை விட்டு நீக்கப்பட்டவர். அவர் இப்போது நாங்கள் இரண்டு பேரும் அம்மாவின் பிள்ளைகள் என்கிறார். அப்படி என்றால் ஓபிஎஸ் ஆட்டுக்குட்டியின் பிள்ளையா? அன்புமணி தனது தந்தைக்கு துரோகம் செய்தவர். பெற்ற தந்தையின் கண்ணீரை வரவழைத்து பாவம் செய்தவர் அன்புமணி. இவர்கள் எல்லாம் சேர்ந்து கூட்டணி. அதான் நேஷனல் டிசீவர் கூட்டணி. தேசத் துரோகிகளின் கூட்டணிதான் என்டிஏ கூட்டணி.
ஆனால் நமது ஜனநாயக முற்போக்கு கூட்டணி கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அற்புதமான கூட்டணி. தாயின் அன்பு பரவசமான அன்பு. மனைவியின் அன்பு உரிமை கலந்த அன்பு. அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து புதுமைப் பெண்ணின் திட்டத்தை கொண்டு வந்த ஒரே முதலமைச்சர் தமிழ்நாட்டு முதலமைச்சர்தான். தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் கொடுத்ததற்கு இளைஞர்கள் அப்பா என்று கூறி நன்றியோடு அழைக்கிறார்கள்.
உடலில் வலி வரும்போது அம்மா என்று அழைப்பார்கள். ஆனால் அப்பா என்ற வார்த்தையை எப்போது பயன்படுத்துவோம் தெரியுமா? வலி குறைந்து நிம்மதியாக இருக்கும்போதுதான் அப்பா என்று சொல்லுவோம். தமிழகத்தின் வலியை போக்கி நிம்மதியை தந்த அப்பா நம் தமிழகத்தின் முதலமைச்சர். அதனால்தான் அவரை எல்லோரும் அப்பா என்று அழைக்கிறார்கள். தன்னை ஒரு குழந்தை தாத்தா என்று அழைத்தபோது அதை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, அந்த குழந்தைக்கு இருந்த அரிய நோயை கேட்டு அதற்காக பல லட்சம் செலவு செய்து மருத்துவர்களை வரவழைத்து நோயை போக்கியவர். இப்படி கஷ்டப்படும்போது தாயுமானவர்போல் வந்து உதவி செய்பவர்தான் நம் முதலமைச்சர்.
எடப்பாடி ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன். 210 தொகுதியில் ஜெயிப்பேன் என்று கூறுகிறார். ஏற்கெனவே 10 முறை பிரேக் டவுன் ஆன வண்டி. நின்றால் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. பெட்ரோல் இல்லை. இந்த வண்டி 210 தொகுதியில் ஜெயிக்கும் என்று ஊர் ஊராக பச்சை கலர் பஸ் எடுத்துக்கொண்டு போய் லேகியம் விற்றுக் கொண்டிருக்கிறார். லேகியம் என்று சொல்லி சக்கரைத் தண்ணீர் விற்பதைபோல் எடப்பாடி பழனிச்சாமி சர்க்கரை தண்ணீரை விற்றுக் கொண்டிருக்கிறார். இப்போது பிரச்சாரம் செய்வதற்கு பாயிண்ட்டே இல்லை. அனைத்தையும் செய்து முடித்து விட்டு அடுத்த ஆட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று தொகுதி தோறும் எங்களைப் போன்றவர்களை அனுப்பி கேட்டு வரச் சொல்லி இருப்பவர் மு.க. ஸ்டாலின்.
எடப்பாடி பழனிச்சாமி பற்றி தற்போது ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. இதயக்கனி படம் பார்த்திருக்கிறார். ஏனென்றால் வேறு வேலை இல்லை. தோற்ககத்தான் போகிறோம். எம்ஜிஆர் படத்தையாவது பார்ப்போம் என்ற நிலையில் இருக்கிறார். இதயக்கனியில் இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என்ற பாடல் ஓடுகிறது. அப்போது எடப்பாடி அழுது கொண்டு உட்கார்ந்திருக்கிறார். இதயக்கனியை பார்த்து விட்டு அழுகிறார் என்றால், மாப்பிள்ளைக்கு மேட்டர் முடியப்போகுது என்று அர்த்தம். கட்சியும் முடியப்போகுது, மேட்டரும் முடியப் போகுது. இதயக்கனி படத்தை பார்த்து விட்டு அழுகிறார் என்றால் எவ்வளவு தூரம் பயந்து இருக்கிறார் என்று தெரியும்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் மீதும் அடக்குமுறை... ஃபாசிஸ்ட் மனநிலை தான்...! EPS கண்டனம்..!