அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவுக்கு எதிராகக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்தார்.
அதிமுகவைப் பற்றிப் பேசுவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாருக்கும் தார்மீக உரிமை கிடையாது என்று ஜெயக்குமார் திட்டவட்டமாகக் கூறினார். அதிமுக ஏன் முன்கூட்டியே விருப்ப மனுவைப் பெறுகிறது என்ற கேள்வியை எழுப்புவதற்கு அமைச்சர் ரகுபதிக்கு உரிமை கிடையாது. அவருக்கு அதிமுகவைப் பற்றி நன்றாகவே தெரியும். அவர் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பேசுகிறார்.
அதிமுகவிலிருந்து சென்றவர்களே திமுகவை வழி நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதிமுகவின் ரத்தத்தைக் குடித்துக் கொழுத்தவர்கள் நிறைய பேர் திமுகவில் உள்ளனர். அவர்கள் தான் ஸ்டாலினுக்குப் பல்லக்கு தூக்குகின்றனர். உதயநிதி ஸ்டாலினுக்குப் பல்லக்கு தூக்குவது இதைவிடக் கேடு கெட்டது என்றும் அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: "210 தொகுதியா? 70-ஐ கூட தாண்ட மாட்டார்கள்": எடப்பாடி பழனிசாமிக்கு வைகோ பதிலடி!
"தமிழகத்தில் திமுக ஆண்டது போதும், மக்கள் மாண்டது போதும். எனவே, ஸ்டாலினே GO BACK என்ற அளவுக்கு மக்களின் மனநிலை தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் நிலையில் நிச்சயமாக ஒரு மாற்றம் வரும்," என்று ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார். இந்தத் தேர்தலில் அதிமுக ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
எஞ்சின் இல்லாமல் அதி வேகமாகச் செல்லக்கூடிய அதிமுக என்ற இயக்கத்தைப் பார்த்து உதயநிதி ஸ்டாலின் விமர்சிக்கிறார் என்று அவர் பதிலளித்தார். கடந்த 25 ஆண்டுக் காலம் தனக்கு வெற்றியைக் கொடுத்த ராயபுரம் தொகுதியில் தான் போட்டியிட உள்ளேன் என்று ஜெயக்குமார் உறுதியாகத் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏற்பட்ட கஷ்டங்களைச் சந்தித்த அந்தத் தொகுதி மக்களுக்குத் தெரியும். அதன்படி, வெற்றியே தேடித் தருவார்கள். எந்தச் சூழ்நிலையிலும் ராயபுரம் தொகுதியை விட்டு நான் விலகிச் செல்ல மாட்டேன் என்றும் அவர் கூறினார். கட்சி முடிவுகள்அதிமுகவில் யாரைச் சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பது தொடர்பாகக் கட்சித் தலைமையும், பொதுச் செயலாளரும் தான் முடிவு செய்வார்கள் என்றும், இதில் தான் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: "டெல்டாவில் திமுக வென்றதால் சதி" - நெல் கொள்முதலில் பாஜக, அதிமுக மீது அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு!