சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் மற்றும் அமைச்சர் சேகர் பாபு பின்னடைவை சந்தித்துள்ளார். துறைமுகம் தொகுதியில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியிருந்த அவர், பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். எனினும், ஆரம்ப கட்ட எண்ணிக்கையில் அவர் பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலிலும் ஆரம்ப சுற்றுகளில் பின்தங்கியிருந்த சேகர் பாபு பின்னர் முன்னிலை பெற்று வெற்றி பெற்றிருந்தார். அதேபோன்று இம்முறையும் நிலைமை மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இம்முறை அவரை ஆதிமுக கூட்டணி அல்லாமல், தமிழக வெற்றி கழக வேட்பாளர் பின்னுக்கு தள்ளியிருப்பது கவனிக்கப்படுகிறது.
மற்ற தொகுதிகளின் நிலவரம்:
விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரண்டாம் சுற்றில் பின்னடைவை சந்தித்துள்ளார். விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் உள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி முன்னிலை வகிக்கின்றன; விராலிமலை தொகுதியில் மட்டும் அதிமுக முன்னிலையில் உள்ளது. கந்தரகோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்திற்கு முன்னிலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: “எல்லாம் முடிஞ்சுது... கிளம்புங்க...” - அலங்கோலமான அண்ணா அறிவாலயம்... பந்தல்கள், எல்.இ.டி. ஸ்கிரீன்கள் அகற்றம்...!
திருச்சி, கோவை நிலவரம்:
லால்குடி தொகுதியில் சில சுற்றுகளில் தமிழக வெற்றி கழகம் முன்னிலை பெற்றுள்ளது. திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் உள்ளார். அமைச்சர் கே.என். நேரு சில சுற்றுகளில் பின்னடைவை சந்தித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து முன்னிலை தக்க வைத்துள்ளார். இத்தொகுதியில் தேர்தல் ஆணையம் முன்னதாக பல்வேறு சோதனைகள் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக 234 தொகுதிகளில் 231 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றி கழகம் இந்த தேர்தலில் எதிர்பாராத முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல தொகுதிகளில் இக்கட்சி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
காலை 8 மணியளவில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது 10.30 மணி நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 113 தொகுதிகளிலும், அதிமுக 71 தொகுதிகளிலும், திமுக 50 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலினையே பின்னுக்குத் தள்ளிய V.S.பாபு..! நொறுங்குகிறதா கொளத்தூர் திமுக கோட்டை..?