ராமநாதபுரத்தில் முக்கிய பகுதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சிவகங்கையில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து ராமநாதபுரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இன்றைய தினம் இருதரப்பினரும் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் இளமனூர் என்ற இடத்தில் சமூக தலைவர்களுடைய பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக இருவேறு சமூகங்களுடைய மோதலானது ஏற்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சத்திரக்குடி, நயனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மற்றொரு தரப்பினர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது அவ்வழியாக வந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களுடைய கார் கண்ணாடிகள் உடைத்து சேகப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: வலுக்கும் கோரிக்கை... கடலில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் மீது பாய்ந்த வழக்கு... போலீஸ் அதிரடி ..!
இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்பான பதற்றமான சூழல் தொற்றிக் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்பாகவும், கார் கண்ணாடிகள் உடைத்தது தொடர்பாகவும் சத்திரக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் மேலும் சிலரை கைது செய்வதற்கான ஏற்பாட்டிலும் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி இரண்டு சமூகத்தினரும் அடுத்தடுத்து போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் காலை 10 மணி அளவில் ஒரு தரப்பினர் ஐந்து முனை சந்திப்பு பகுதியிலும், மாலை 5 மணி அளவில் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில மற்றொரு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். அந்த போராட்டத்திற்கு காவல் துறையினர் சார்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில், அதனையும் தாண்டி போராட்டம் நடத்தப்படும் என இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். அதனால் பரமக்குடியின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, பதற்றத்தை தணிக்குதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீப் வந்து நிகழ்விடத்தில் ஆய்வு செய்தது மட்டுமல்லாது, போலீசாருடைய எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவரை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய போலீஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், அவர்களை அடைத்து வைப்பதற்காக தனியார் மண்டபங்களில் தயார் செய்து வைத்திருப்பதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்து கூறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக்கை இழுத்து பூட்டிய நா.த.க.வினர்… பேரிகார்டுகளை தூக்கி எறிந்து போராட்டம்…!