மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விஜய் தலைமையிலான அரசுக்கு எம்.எல்.ஏ.க்களை வேறு கட்சிகளில் இருந்து இழுத்து வர வேண்டிய அவசியமே இல்லை என்றும், தற்போதைய ஆட்சியில் லஞ்சம் மற்றும் ஊழல் கணிசமாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, வியட்நாமில் சுற்றுலா சென்றபோது உயிரிழந்த தமிழர்களின் உடல்களை விரைவாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
செவ்வாய் அல்லது புதன்கிழமைக்குள் உடல்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், இந்த விபத்து அலட்சியம் காரணமாக ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: இன்னும் 6 மாசத்துல மு.க.ஸ்டாலின் முதல்வராவார்!! திமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது - அனிதா ராதாகிருஷ்ணன்!
தொடர்ந்து தமிழக அரசியல் குறித்து பேசிய அவர், விஜய் அரசுக்கு எம்.எல்.ஏ.க்களை களவாட வேண்டிய தேவையில்லை என்று கூறினார். தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று வெற்றி பெற்ற ஆட்சி என்பதால், வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இணைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், "பல கோடி ரூபாய் செலவு செய்தும் திமுக மற்றும் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை" என்று விமர்சித்தார்.

அதிமுக மற்றும் திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது, அந்தக் கட்சிகளின் தலைமையின் மீது நம்பிக்கை குறைந்ததன் விளைவு என்றும் துரை வைகோ கூறினார். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தற்போதைய அரசு கைவிட்டிருப்பதற்கு சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், அதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஒரே அணியில் இணைவது பொருத்தமானதல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்தார். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவுடன் இணைந்து செயல்பட்ட அரசியல் சூழலில், திமுக எவ்வாறு பா.ஜ.க.வை எதிர்க்கும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இறுதியாக, "தவெக ஆட்சியில் லஞ்சம், ஊழல் குறைந்துள்ளது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. தமிழ்நாட்டில் புதிய அரசியல் மாற்றத்தை விஜய் உருவாக்கியுள்ளார். அந்த மாற்றம் தொடர வேண்டும் என்பதற்காகவே நாங்கள் விஜய்யுடன் கூட்டணியில் இருக்கிறோம்" என்று துரை வைகோ தெரிவித்தார். மேலும், புதிய கட்சியை தொடங்கிய அண்ணாமலைக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING வாத்தி ரெய்டு ஸ்டார்ட்... விடிந்ததுமே அறிவாலயத்திற்கு செம்ம ஷாக்... தா.மோ.அன்பரசனுக்கு எதிராக அதிரடி ஆக்ஷன்...!