தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கொடூரமான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை (செப். 27) இரவு கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தபோது விஜயின் வாகனத்தை நோக்கி தொண்டர்கள் படையெடுக்கவே நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பெண்கள், 13 ஆண்கள், 9 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, 60 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன் கரூர் சம்பவத்துக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், கரூர் சம்பவத்தால் நாடே அதிர்ந்துபோயுள்ளது. இந்தியாவிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் சார்பில் எத்தனையோ பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் எங்கும் இல்லாத வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கரூரில் 41 பேர் பலியான சம்பவத்துக்கு பிறகு தமிழகம் தலைகுணிந்து நிற்கிறது என்றார்.
இதையும் படிங்க: வர 9ஆம் தேதி சம்பவம் இருக்கு! முக்கிய அறிவிப்பை வெளியிடும் செங்கோட்டையன்...
இதற்கு ஆட்சியாளர்களே காரணம் என்று குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடங்கள் ஏன் உரிய காவல் பாதுகாப்பு இல்லை? இன்றைய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம். 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் திமுக அரசுதான் என்று கடுமையாக சாடினார். மேலும் மக்களை காக்கும் பொறுப்பு அரசையே சேரும். மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. கரூரில் பெரிய துயரச் சம்பவம் நடந்த நிலையில் துணை முதல்வர் எங்கே போனார்? கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏன் பதறுகிறார் என்றும் அவர் கண்ணில் பயம் தெரிகிறது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்று ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி.. எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி.. முதல்வர் கூடும் இடங்களில் அதிக பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், மற்ற கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறினார். அரசியல் கட்சி கூட்டங்களுக்கு பாகுபாடு இன்றி உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது. திமுகவினர் தரும் போலி வாக்குறுதிகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கரூரில் தவறு செய்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: பாஜக இருக்கும் இடம் சர்வநாசம்! அதிமுக நாலா உடைய காரணமே அவங்கதான்... குண்டை தூக்கிப்போட்ட செல்வப் பெருந்தகை...