திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பரப்புரையின் போது, அவருக்கு அருகிலேயே நின்றிருந்த மாவட்டச் செயலாளர் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்தும், அதனைப் பொருட்படுத்தாமல் இபிஎஸ் தனது உரையைத் தொடர்ந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, தனது பரப்புரை வாகனத்தில் பேசிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் அரங்கேறியது. உடன் இருந்த முன்னாள் அமைச்சர் விரைந்து செயல்பட்டு மயங்கியவரை மீட்ட நிலையில், எடப்பாடியின் இந்த ‘அலட்சியப் போக்கு’ கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கவரைப்பேட்டையில் அதிமுக சார்பில் இன்று பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் மற்றும் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது விசேஷ பரப்புரைப் பேருந்தின் மேல்தளத்தில் நின்றபடி தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவருக்கு வலதுபுறத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சிறுணியம் பலராமனும், இடதுபுறத்தில் முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமாரும் நின்றிருந்தனர். எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு எதிராக அனல் பறக்கப் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், அருகில் நின்றிருந்த மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமன் திடீரென உடல்நலக் குறைவால் நிலைகுலைந்து மயங்கினார்.
இதையும் படிங்க: 2026-தேர்தல் வியூகம்: டிசம்பர் 31-ல் எடப்பாடி போடும் மாஸ்டர் பிளான்! மாசெக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு?
தன்னுடைய கைக்கெட்டும் தூரத்தில் நின்றிருந்த மாவட்டச் செயலாளர் மயங்கிச் சரிவதைக் கண்டும், எடப்பாடி பழனிசாமி தனது பேச்சை ஒரு கணம் கூட நிறுத்தாமல் தொடர்ந்து மைக் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் அங்கிருந்த நிர்வாகிகள், உடனடியாகப் பலராமனை கைத்தாங்கலாகப் பிடித்து அமர வைத்து, பின்னர் பேருந்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். சிறிது நேர ஓய்விற்குப் பிறகு உடல்நிலை தேறிய சிறுணியம் பலராமன், எடப்பாடி பழனிசாமி தனது உரையை முடித்துப் புறப்படும் வேளையில் அவருக்குச் சால்வை அணிவித்து வீரவாள் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.
எனினும், ஒரு கட்சியின் மூத்த நிர்வாகி மற்றும் மாவட்டச் செயலாளர் தமக்கு அருகிலேயே மயங்கி விழுந்தும், ஒரு மனிதாபிமான அடிப்படையில் கூட பேச்சை நிறுத்தாமல் எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்டது அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அரசியல் பேச்சை விட சக மனிதனின் உயிர் முக்கியமில்லையா?” என ரத்தத்தின் ரத்தங்களே முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அரசியல் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இதையும் படிங்க: ராயப்பேட்டையில் அலைமோதும் கூட்டம்! அதிமுக வேட்பாளர் விருப்பமனு நீட்டிப்பு - எடப்பாடியார் அதிரடி!