தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு, ஜூலை 12, 2025 அன்று மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தத் தேர்வு, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், குறுகெழுத்து-தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது. மொத்தம் 13,89,738 விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர், இதில் 11,48,019 பேர் (82.61%) தேர்வில் பங்கேற்றனர்.

தேர்வு முடிவுகள் செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தேர்வு நடைமுறையில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் தேர்வர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது. தேர்வு வினாத்தாளில் 10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை மீறிய கேள்விகள் இடம்பெற்றதாகவும், பொதுத் தமிழ் பகுதியில் தெளிவற்ற மற்றும் பாடநூலுக்கு அப்பாற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: தவெக IN.. பாஜக OUT.. அமித்ஷா, அண்ணாமலைக்கு ஆப்பு.. இபிஎஸ்-ன் தகிடுதத்தோம் திட்டம்..!
மேலும், விடைத்தாள் முறையாக சீல் வைக்கப்படாமல் கொண்டு செல்லப்பட்டதாகவும், சில தேர்வு மையங்களில் முகவரி தவறாக அச்சிடப்பட்டதால் தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் திரும்பியதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால், தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி, விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளது. இருப்பினும், தேர்வர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு ஆட்சேபனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த குளறுபடிகள் காரணமாக கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். தேர்வர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, டி.என்.பி.எஸ்.சி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது? ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி கடந்த ஜூலை 12ம் தேதி அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும், குரூப்-4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.. மக்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்..!