ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் சரளை விஜயபுரி அம்மன் கோவில் திடலில் இன்று (டிசம்பர் 18) தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் நடிகர் விஜய் உரையாற்ற உள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் நடக்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் என்பதால், காவல்துறை பல்வேறு கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பாக்ஸ் பாக்ஸாக பிரித்து இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் 400 முதல் 500 பேர் வரை மட்டுமே நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு தனி பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.
தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால், கொங்கு மண்டலத்தில் கட்சியின் செல்வாக்கை வெளிக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இதையும் படிங்க: பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்... டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடும் இபிஎஸ்... விளாசிய முதல்வர்...!

கூட்டத்தில் விஜய் குறைந்தது 30 நிமிடங்கள் பேச வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கை வைத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதிமுகவைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்களை தவெகவில் இணைத்து கட்சியை பலப்படுத்துவேன் என்று நிர்வாகிகள் மத்தியில் செங்கோட்டையன் பேசியதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, இன்றைய கூட்டத்தில் பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, செங்கோட்டையன் "பொறுத்திருந்து பாருங்கள்" என்று பதிலளித்தார்.
மேலும், இந்தக் கூட்டத்தில் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதால், கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் கூட்ட மைதானத்துக்கு விஜய் செல்ல உள்ளார்.
இதையும் படிங்க: சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படம்!! ஆனால்! ஈரோடு நிகழ்ச்சிக்கு செங்கோட்டையன் கெட்டப் வைரல்!