கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்த துணை முதல்வர் பதவி குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் புதிய துணை முதல்வராக ஜி. பரமேஸ்வரா இன்று பதவியேற்க உள்ளார் என்பதை முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அப்போது கட்சிக்குள் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, முதல் கட்டமாக சித்தராமையா முதல்வராகவும், பின்னர் டி.கே. சிவகுமார் முதல்வராகவும் பதவி வகிப்பார் என முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக டி.கே. சிவகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதையடுத்து, புதிய அரசு அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: சிவக்குமார் தலைமையில் கர்நாடக அமைச்சரவை பட்டியல் ரெடி! சித்தராமையா மகனுக்கு அமைச்சர் பதவி!!

பெங்களூருவில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் விழாவில் டி.கே. சிவகுமார் கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வரும் பதவியேற்க உள்ளனர். இந்த நிலையில், துணை முதல்வர் பதவிக்கு பல மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

ஆனால் அந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜி. பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், முதல்வராக பதவியேற்கவுள்ள டி.கே. சிவகுமாரும், துணை முதல்வராக பதவியேற்கவுள்ள ஜி. பரமேஸ்வராவும் தன்னை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி. பரமேஸ்வரா, சித்தராமையா தலைமையிலான முந்தைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பணியாற்றியவர். நிர்வாக அனுபவம் மற்றும் கட்சியில் நீண்டகால பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
புதிய முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா தலைமையில் கர்நாடக அரசு புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்க உள்ள நிலையில், மாநில அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ஆரம்பிக்கும் தலைமை மோதல்!! துணை முதல்வர் பதவி கேட்டு அரசியல் வாரிசுகள் போட்டி!