சண்டிகர்/டெல்லி: ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டசபை தேர்தலில் டிக்கெட் வாங்க 7 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக வாட்ஸாப் உரையாடல் ஆதாரம் வெளியாகி, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆதாரத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெளியிட்டுள்ளார்.
ஹரியானா மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவரின் கணவர் கவுரவ் குமார் என்பவர் இந்த வாட்ஸாப் சாட்டை பகிர்ந்ததாக பண்டாரி கூறியுள்ளார். அதில், காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான பிரியங்கா வாத்ரா தனது தனி உதவியாளர் மூலம் 7 கோடி ரூபாய் கேட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால், சுரேஷ் என்பவர்களும் இதில் தொடர்புடையவர்கள் என்று பண்டாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதீப் பண்டாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சோனியா குடும்பம் ஊழலில் ஈடுபட்டதற்கு இது ஆரம்ப ஆதாரம். டிக்கெட் விற்பனைக்கு 7 கோடி ரூபாய் கேட்கிறார்கள். சோனியா குடும்பம் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.
இதையும் படிங்க: கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்தார் ராமதாஸ்! ஜி.கே. மணி தலைமையில் ஐவர் குழு அமைப்பு!

இதனால் அவர்கள் இதை ஒப்புக்கொண்டதாகவே தெரிகிறது.” பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கடுமையாக சாடியுள்ளார்: “காங்கிரஸ் இப்போது அரசியல் கட்சியாக இல்லை, ஷாப்பிங் மால் போல ஆகிவிட்டது. அதிக பணம் கொடுப்பவருக்குத்தான் சீட். ஜனநாயகத்தை விற்கிறார்கள்.”
மற்றொரு பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி, “பஞ்சாப் முதல் கேரளம் வரை காங்கிரஸின் கலாசாரம் ஊழல்மயமாகிவிட்டது” என விமர்சித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு 2024 ஹரியானா சட்டசபை தேர்தலின்போது நடந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், காங்கிரஸ் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்காதது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியின் உள் நிர்வாகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா காங்கிரஸ் தலைவர்கள் மவுனம் காத்து வரும் நிலையில், பாஜக இதை தொடர்ந்து பிரசாரத்தில் பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் மீது ஏற்கனவே பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், இந்த புதிய ஆதாரம் கட்சியின் நம்பகத்தன்மையை மேலும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உயர்மட்டத்தில் விசாரணை நடத்தப்படுமா என்பது இப்போது கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: கமேனி மகன்னா விட்ருவோமா? யாரா இருந்தாலும் அழிப்போம்! ஈரானுக்கு இஸ்ரேல் பகீரங்க மிரட்டல்!