சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் இன்று தேவகோட்டை நகர்ப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். யூனியன் ஆபீஸ் சாலை, தியாகிகள் பூங்கா, கண்டதேவி ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கூட்டணி கட்சித் தொண்டர்களுடன் நடந்தே சென்று அவர் ஆதரவு திரட்டினார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வருமான வரித்துறையினரால் பிரச்சாரத்திற்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்துக் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மத்தியில் உள்ள வருமான வரித்துறை (IT) மற்றும் அமலாக்கத்துறை (ED) ஆகியவை முழுக்க முழுக்க ஆளும் பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுகின்றன. தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் குறிவைத்து இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது உள்நோக்கம் கொண்டது."
ஐ.டி ரெய்டு நடக்கவில்லை என அண்ணாமலை கூறுகிறார். அண்ணாமலை ஒரு எம்பி-யோ, எம்எல்ஏ-வோ அல்லது அமைச்சரோ கிடையாது. ஒரு கட்சிப் பிரதிநிதிக்கு அரசு அதிகாரிகளின் ரகசிய நடவடிக்கைகள் எப்படித் தெரிகிறது? அதிகாரிகளின் மூவ்மெண்ட் அண்ணாமலைக்குத் தெரிகிறது என்றால், இந்த அரசாங்கம் நியாயமாக நடக்கிறதா அல்லது பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறதா என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க: "நடிகர் திலகத்திற்கே வராத கூட்டமா?" - விஜய்யின் வருகை குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்!

ராகுல் காந்தியின் கன்னியாகுமரி பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு,
முதலமைச்சரின் பயணத் திட்டம் (Tour Program) வேறு. நேற்று தான் ஓசூரில் எங்களது அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், முதலமைச்சரும் ஒரே மேடையில் பேசினார்கள். தமிழ்நாடு பெரிய மாநிலம் என்பதால் இரு முனைகளையும் கவர் செய்வதற்காகத் தனித்தனிப் பயணத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இது 2004-ல் கலைஞர் மற்றும் சோனியா காந்தியால் உருவாக்கப்பட்ட வெற்றி கூட்டணி. இதில் எந்த முரண்பாடும் இல்லை என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் பணம் எடுக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குத் தனது பாணியில் பதிலளித்த கார்த்தி சிதம்பரம், "பணம் இருந்தால் கொடுத்துவிடுங்கள், நான் வாங்கிக் கொள்கிறேன். என்னிடம் பணம் இல்லை, ஆனால் யாராவது கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன்" என நையாண்டியாகக் கூறிப் பதிலளித்தார். தேவகோட்டை நகரின் ஒத்தக்கடை வரை நீண்ட இந்த நடைபயணப் பிரச்சாரத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு 'கை' சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!" - சைதாப்பேட்டையில் ஜி.கே.வாசன் ஆவேசம்!