சென்னை: சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதனால், இருவருக்கும் ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்மன் உள்ளிட்டோர் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதே வழக்கில் வீரமணியின் உதவியாளர் கணேசனும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களுக்கு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிப்பதற்காக வீரமணியிடம் இருந்து சாந்தி ரூ.24.63 லட்சம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வழக்கை முடிக்க முயன்றது ஏன்? ஜெம் வீரமணி விவகாரத்தில் போலீசார் மீது விசாரணை!
மேலும், இருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அச்சுறுத்தவும் வாய்ப்பு இருப்பதாகவும், வெளிநாடு தப்பிச் செல்லக்கூடும் என்றும் காவல்துறை தரப்பு வாதிட்டது.
இந்த மனுக்கள் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். பத்மா முன்பு செப்டம்பர் 29-ம் தேதி விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது நடைமுறையில் குறைபாடுகள் இருப்பதாகவும், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றும் வாதிட்டார். ஏற்கனவே காவல் விசாரணை முடிந்துள்ளதால் தொடர்ந்து சிறையில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
இதற்கு காவல்துறை தரப்பு, விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தியது. தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் தரப்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணை விவரங்கள் நீதிமன்றத்தின் இறுதி பரிசீலனைக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கு! எங்களையும் சீரழிச்சிட்டாரு! SIT முன் மேலும் 3 சிறுமிகள் கண்ணீர்!