சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ், தொழிலதிபர் ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திரன் சிம்மன், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முதலில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. பின்னர், இந்த வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திரன் சிம்மன் ஆகியோரிடம் ஏற்கெனவே முதல் வழக்கில் மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையைச் சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொண்டிருந்தது.
தற்போது, அதே முதல் வழக்கில் வீரமணி உள்ளிட்ட நான்கு பேரையும் மீண்டும் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனுத் தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: வெடிக்கும் ஜெம் வீரமணி வழக்கு.! தொழிலதிபர் பிரகாஷ் முன்ஜாமீன் தள்ளுபடி.! முக்கிய உத்தரவு.!!
ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மீண்டும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளுடனான தொடர்புகள் குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக மூன்று நாட்கள் காவல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி பத்மா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, வீரமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி. விக்னேஷ், வீரமணிக்கு 84 வயதாகிறது என்றும், வயது முதிர்வைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே சிறையில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
84 வயதான அவரைச் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் ஏற்கெனவே அவரைத் துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டி, மீண்டும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என்றும், எனவே தற்போதைய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வீரமணி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஏற்கெனவே காவலில் வைத்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கூடாது என்றும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு, ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட தொடர்புகள் குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்தது.
இதையடுத்து, வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரன் சிம்மன் ஆகிய மூவரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனுக்கள் மீதான உத்தரவை நாளைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி பத்மா தெரிவித்தார்.
அதேவேளையில், வீரமணியின் உதவியாளர் கணேசனை முதன்முறையாகக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்
இதையும் படிங்க: சிபிஐ எதற்கு..? ஜெம் வீரமணி வழக்கின் விசாரணை... திட்டவட்டமாக மறுத்த கோர்ட்..!