கர்நாடகாவில் உள்ள காவிரி ஆற்று அணைகளில் நீர் இருப்பு 60 டி.எம்.சி-யாக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை உடனடியாகத் திறந்துவிட வலியுறுத்தி, டெல்லியில் நாளை நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலுவாக வாதிட வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று (சூலை 21, 2026) வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்றத் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள முக்கியக் தரவுகள். கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளின் நீர் இருப்பு 60 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 9,000 கன அடிக்கும் அதிகமாகத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 35 டி.எம்.சி நீர் வந்து சேர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு!
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஜூன் மற்றும் ஜூலை (இன்று வரை) மாத கணக்குப்படி தமிழ்நாட்டிற்கு 31.07 டி.எம்.சி நீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கர்நாடகம் வெறும் 3.44 டி.எம்.சி மட்டுமே வழங்கியுள்ளது. இன்னும் 28.63 டி.எம்.சி நீரை பாக்கி வைத்துள்ளது. கர்நாடக அணைகளில் 50 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க மறுப்பது மனிதநேயமற்ற செயலாகும்." என அன்புமணி கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழ்நாட்டின் தற்போதைய கள நிலவரத்தைக் கவலையோடு பகிர்ந்துள்ள அவர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 74.7 அடியாகக் குறைந்துவிட்டது (நீர் இருப்பு 36.87 டி.எம்.சி). காவிரியில் தண்ணீர் வராததாலும், நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்டதாலும் காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்கள் தண்ணீர் இன்றிப் படிப்படியாகக் கருகத் தொடங்கிவிட்டன. இதன்பிறகும் கர்நாடகம் தண்ணீர் திறக்காததை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், அது தமிழக உழவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும்.
டெல்லியில் நாளை நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், கர்நாடக அணைகளின் நீர் வரத்து உண்மைகளையும், தமிழ்நாட்டில் குறுவைப் பயிர்கள் கருகும் அவல நிலையையும் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக எடுத்துக் கூறி, பாக்கியுள்ள காவிரி நீரை உடனடியாகப் பெறத் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!