தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், பன்னாட்டு முதலீட்டாளர்களை நேரில் சந்தித்துப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தனது முதல் அரசு முறை வெளிநாட்டுப் பயணமாக இன்று (செப்டம்பர் 10) இரவு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று இரவு 10 மணியளவில் வழக்கமான எமிரேட்ஸ் பயணிகள் வணிக விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், முதலில் துபாய் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்து, அங்கிருந்து இணைப்பு விமானம் வாயிலாக லண்டன் விரைகிறார். முதலமைச்சரின் இந்தப் பயணத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் திரண்டு அவருக்கு உற்சாக வழியனுப்பு வைத்தனர்.

லண்டனில் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை முகாமிடும் முதலமைச்சர், அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டங்களில் நேரடியாகப் பங்கேற்கிறார். அப்போது முன்னணி ஐரோப்பிய மற்றும் பிரிட்டிஷ் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் நிதி அமைப்புகளின் உயர் அதிகாரிகளைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச உள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழல், கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசு வழங்கும் சிறப்புச் சலுகைகளை விரிவாக எடுத்துரைத்து, ஆட்டோமொபைல், மின்சார வாகனம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முன்னணித் துறைகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடுகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான அழைப்பை முதல்வர் விடுக்கவுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!
அத்துடன், தேர்தல் வாக்குறுதி மற்றும் சட்டப்பேரவை அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் அமையவுள்ள பிரம்மாண்ட 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நுணுக்கங்களை அறிந்துகொள்வதற்காக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் சர்க்யூட்' வளாகத்தையும் முதல்வர் குழுவினர் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
லண்டன் பயணத்தின் அனைத்து உத்தியோகபூர்வ சந்திப்புகள் மற்றும் ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை முதலமைச்சர் விஜய் மீண்டும் சென்னை திரும்புகிறார். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் முதல்வர் மேற்கொண்டுள்ள இந்த வெளிநாட்டுப் பயணம் தொழில் உலகிலும் தமிழக அரசியல் களத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.953 கோடி நிதி சுமையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை!