தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக மாற்றும் உன்னத நோக்கோடு, பல்வேறு உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' அமைப்பதற்கான கள ஆய்வுகளை மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அரசு முறைப் பயணமாக இன்று (செப்டம்பர் 10) இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறார்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை (DIPR) வெளியிட்டுள்ள விரிவான செய்தி வெளியீட்டில் (எண்: 641) கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் நடத்தப்பட்ட 'வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026' வாயிலாக ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் ரூ.8,491 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளன; இதன்மூலம் தமிழ்நாட்டில் சுமார் 5,690 நபர்களுக்குப் புதிய உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கடந்த 15.07.2026 அன்று நடைமுறைக்கு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA), இந்த முன்னெடுப்புகளுக்குப் பெருமளவில் வலுசேர்த்துள்ளது. இந்த CETA ஒப்பந்தம் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்களை அனுப்பி வைத்து, இவ்வொப்பந்தத்தைச் செயல்படுத்திய முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. ஜவுளி, தோல் மற்றும் காலணிகள், வாகன உதிரிபாகங்கள், பொறியியல் மற்றும் மின்னணுவியல் துறைகள் பிரிட்டன் சந்தையில் அபரிமிதமான வாய்ப்புகளைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: வேடிக்கை பார்த்துவிட்டு ஹீரோயிசம் காட்டுவதா..?? பொங்கிய கனிமொழி.. சரமாரியாக எழுந்த கேள்விகள்!!
பிரிட்டன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல உற்பத்தி ஆலைகளையும், உலகளாவிய திறன் மையங்களையும் (GCCs) நிறுவி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இத்தகைய இருதரப்பு வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், மேம்பட்ட உற்பத்தி, மின்சார வாகனங்கள் (EV), மின்னணுவியல் மற்றும் திறன் மையங்களில் புதிய பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும் முதலமைச்சரின் இந்தப் பயணத்தின் தலையாய நோக்கமாகும்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' (Motor Sports City) தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வரலாற்று அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பை மிக விரைவாகச் செயல்படுத்தும் பொருட்டு, இங்கிலாந்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்' (Silverstone Motor Racing Circuit) வளாகத்தை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளார். அங்குள்ள சர்வதேச சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் மற்றும் வணிக ரீதியான செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்து கொள்வதுடன், விளையாட்டுச் சுற்றுலா மற்றும் சிறப்பு வாகனத் தொழில்களுக்கான புதிய வாய்ப்புகளையும் முதல்வர் கண்டறிய உள்ளார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான இந்த உயர்மட்டக் குழு இன்று (செப்டம்பர் 10) சென்னையிலிருந்து புறப்பட்டு, இங்கிலாந்தில் பல்வேறு சந்திப்புகளை முடித்துக்கொண்டு வரும் செப்டம்பர் 17 அன்று தாயகம் திரும்புகிறது. இக்குழுவில் மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலர் திரு. மேகநாத ரெட்டி ஐஏஎஸ், தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் (Guidance) மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. தீபக் ஜேக்கப் ஐஏஎஸ் மற்றும் அரசின் உயர் அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனமா? சட்டசபையில் மீண்டும் சூடுபிடித்த விவாதம்!!