சென்னை: வருகிற 2026 தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்து இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் சார்பில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மாநில அளவில் நடத்திய 61வது கள ஆய்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
இந்த ஆய்வின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் பேசியபோது, தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதல்வராக வாய்ப்பு யாருக்கு உள்ளது என்ற கேள்விக்கு 55 சதவீதம் பேர் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பெயரை கூறியுள்ளதாக தெரிவித்தார்.
திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா என்ற கேள்விக்கு 25 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 47 சதவீதம் பேர் நிறைவேற்றவில்லை என்று கருத்து கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: திமுக, அதிமுக, தவெக, நாதக!! 2026ல் அரியணை ஏறுவது யார்? உளவுத்துறை சர்வேயில் பெரிய ட்விஸ்ட்!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்த கட்சியின் வாக்குகளை அதிகம் பிரிக்கும் என்ற கேள்விக்கு திமுக முதலிடத்திலும், விடுதலை சிறுத்தைகள் இரண்டாவது இடத்திலும், அதிமுக மூன்றாவது இடத்திலும் உள்ளதாக ஆய்வு காட்டியுள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணி உருவானது பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு 41 சதவீதம் பேர் வரவேற்பு இல்லை என்று பதிலளித்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு கட்சி வளர்ச்சி அடையவில்லை என்று 60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து 53 சதவீதம் பேர் மோசமாக உள்ளதாகவும், 22 சதவீதம் பேர் நன்றாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். இளம் வாக்காளர்களை கவரும் தலைவர்களில் விஜய் முதலிடத்திலும், அண்ணாமலை இரண்டாவது இடத்திலும் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் சிறுபான்மையினர் மத்தியில் வரவேற்பு பெற முடியுமா என்ற கேள்விக்கு 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு 41 சதவீதம் பேர் ஏற்படுத்தும் என்றும், 27 சதவீதம் பேர் ஓரளவுக்கு ஏற்படுத்தும் என்றும், 24 சதவீதம் பேர் இல்லை என்றும் கூறியுள்ளனர். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தவெக உள்ளதா என்ற கேள்விக்கு 44 சதவீதம் பேர் இல்லை என்று பதிலளித்துள்ளனர்.
எம்.ஜி.ஆருக்கு நிகரான தலைவராக விஜயை மக்கள் பார்க்கிறார்களா என்ற கேள்விக்கு 50 சதவீதம் பேர் இல்லை என்று கூறியுள்ளனர். சீமான் எம்எல்ஏவாக வேண்டும் என்று 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் நான்கு முனை போட்டி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், வாக்குகள் சிதறினால் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்ற கருத்து தவறு என்றும் ஆய்வு கூறுகிறது. திமுக வலுவான கூட்டணியாக உள்ளது.
அதிமுக-தவெக தனித்தனியாக கூட்டணி அமைத்தால் மும்முனை போட்டி ஏற்படும் என்றும், சீமான் நான்காவது இடத்தையே பிடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக வலுவான கூட்டணி அமைத்தால் இரண்டாவது இடத்துக்கு அதிமுக கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு 76 சதவீதமாக இருந்தால் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாகவும், அது மாறினால் வெற்றி வாய்ப்புகளும் மாறும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. திமுக கூட்டணி 30.62 சதவீத வாக்குகளுடன் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக கூட்டணி 26.39 சதவீதமும், தவெக 21.07 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 7.50 சதவீதமும் பெறும் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இதையும் படிங்க: தவெக + காங்., கூட்டணி! வாழ்த்தி வரவேற்போம்!! செங்கோட்டையன் சூசக பதில்!