சென்னை: “விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை… இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போல ஒரு சாதாரண சந்திப்பு தான்… திரைப்படம் பற்றி பேசியிருக்கலாம்” என்று காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சல் ஏற்படுத்திய இந்த “இட்லி-வடை சந்திப்பு” இப்போது மீம்களாகவும், ட்ரோல்களாகவும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.
என்ன நடந்தது?
திமுகவுடன் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைத்து முதல்வர் ஸ்டாலினையே சந்தித்து பேசி வரும் நிலையில், அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி திடீரென விஜயை சந்தித்துப் பேசியது பெரும் சர்ச்சையானது. அப்போது காங்கிரஸ் விரும்பும் 135 தொகுதிகளின் பட்டியலை விஜயிடம் கொடுத்து, “75 சீட் கொடுத்தால் கூட்டணி பார்க்கலாம்” என்று பேசியதாகவும் தக் கூறப்படுகிறது.
இதை அறிந்த திமுக ஆதரவு காங்கிரஸ் தலைவர்களும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் கொதித்தெழுந்தனர். “திமுகவுடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கும் போது, திமுகவுக்கு எதிராக நிற்கும் விஜயை சந்திப்பதே துரோகம்” என்று கட்சி விரோத நடவடிக்கை கோரி காங்கிரஸ் தலைமைக்கு கடிதமும் எழுதினர். திமுக தரப்பிலும், “இதுபோன்ற சந்திப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்” என்று ராகுல்-சோனியாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: விஜயுடன் ராகுலின் வியூக வகுப்பாளர் சந்திப்பு!! தவெக + காங்., கூட்டணி?! திமுகவுக்கு கல்தா கன்ஃபார்ம்!!
இந்த நெருக்கடியால் திக்குமுக்காடிப்போன பிரவீன் சக்கரவர்த்தி, ஒரு ஆங்கில இணைய ஊடகத்துக்கு அவசர அவசரமாக பேட்டி அளித்தார். அதில் அவர் சொல்லிய வார்த்தைகள் தான் இப்போது ட்ரெண்டிங்:

“எல்லா சந்திப்புக்கும் பின்னால் அரசியல் திட்டம் இருக்க வேண்டிய அவசியமில்லை. இட்லி, வடை, தோசை சாப்பிடுற மாதிரி ஒரு சாதாரண சந்திப்பா இருக்கலாம். திரைப்படம் பற்றி பேசியிருக்கலாம். விஜயை சந்தித்ததில் எனக்கு எந்த தவறும் தெரியல. தவெகவில் சேர்ற எண்ணமும் எனக்கில்லை. இதனால திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் வரல!”
இதைப் படித்ததும் தமிழக அரசியல் வட்டாரமே வாய் விட்டு சிரித்துவிட்டது. “இட்லி-வடை சாப்பிடுறதுக்கு 135 தொகுதிகள் லிஸ்ட் எடுத்துட்டு போவாங்களா?” என்று திமுக ஆதரவாளர்கள் ட்ரோல் அடிக்க, தவெக ரசிகர்கள் “பிரவீன் அங்கிள் வரட்டும், இட்லி சட்னி ரெடியா வச்சிருக்கோம்” என்று கலாய்த்து வருகின்றனர்.
மற்றொரு தகவல் – காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுசாமி, விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை இரண்டு முறை சந்தித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி திமுக தரப்பு காங்கிரஸ் மேலிடத்துக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க: ஆட்சி அதிகாரத்தில் பங்கு! தராவிடில் தவெகவுடன் கூட்டணி!! அகல கால் வைக்கும் காங்கிரஸ்!! திமுகவுக்கு தீராத தலைவலி!!