திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தனது கருத்துக்கு இன்று விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "சுடுகாட்டைத் தவிர வேறு எங்கும் உடலை எரிக்க முடியாது. அதைப்போலத்தான் மற்ற பழக்க வழக்கங்களையும் மாற்ற முடியாது" என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாகவும், ஹிந்து உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி பேசினார். அவர் கூறுகையில், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு 'பேய் கதை'யை அவிழ்த்துவிட்டதாக நீதிமன்றம் கூறியது. நீதிபதிகள் 'பேய் கதை' என்று கூறியதால், நான் சுடுகாடு என்ற உதாரணத்தை கூறினேன். அதில் எந்தத் தவறும் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: மார்ச்சில் எலெக்சன் தேதி அறிவிப்பு!! தமிழகம் வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகள்!

மேலும், "பேய் இருக்கிறது என்று கதை சொல்லி இருக்கிறார்கள் என்று நீதிபதிகள் கூறிய போது, அதற்கு ஏற்ப சுடுகாடு உதாரணத்தை நான் கூறினேன். அரசு பேய் கதைகள் சொல்கிறது என்று நீதிபதிகள் கூறும்போது, நான் கூறியதில் தவறு இல்லை. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எந்தக் கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை. சட்டத்துக்கு உட்பட்டே பேசினேன்" என்று விளக்கினார்.
முன்னாள் வழக்கறிஞர் என்ற முறையில், முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் கருத்து தெரிவிக்கும் உரிமை தனக்கு உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். "திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று அரசு தரப்பில் கேட்கிறோம். தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பது வழக்கு தொடர்ந்தவரின் பொறுப்பு" என்று அவர் வலியுறுத்தினார்.
அமைச்சரின் இந்த விளக்கம் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஹிந்து அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் அமைச்சரின் கருத்தை தொடர்ந்து கண்டித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஆவின் பால் விலை உயர்வா? எது உண்மை... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...!