பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி அவர் குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ள பதிவில், தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!. தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!. பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்! எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் திராவிடியன் ஸ்டாக்கைச் சேர்ந்தவன்” என்று, தன்னை அடக்கியாள நினைத்த அதிகார வர்க்கத்தினரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, தெற்கின் சுயமரியாதையை ஒற்றை வாக்கியத்தில் உலகுக்கு பிரகடனம் செய்தவர் பேரறிஞர் அண்ணா. அவருடைய பேச்சைக் கேட்டால் அரசியல் புரியும். அவருடைய எழுத்தைப் படித்தால் சமூகம் புரியும். மொத்தத்தில், அண்ணாவைப் புரிந்துகொண்டால் நவீன தமிழ்நாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.
“மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்பது கலைஞர் சொன்ன கொள்கை மட்டுமல்ல; அது அண்ணா காட்டிய பாதை. மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக அவர் வகுத்த வியூகத் திட்டம் அது. அவர் கண்மூடித்தனமாகக் கைதட்டும் தொண்டர்களை உருவாக்கவில்லை. உலக அரசியலை எடுத்துச் சொல்லி, “தம்பி” என்று அரவணைத்து, தலைவர்களை உருவாக்கிய உண்மையான வழிகாட்டியாக இருந்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலினின் மிசா சர்ச்சை... முதல்வர் விஜயை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!
அவர் ஒரு கட்சியை மட்டும் கட்டமைக்கவில்லை. தமிழர்களின் தலைமுறையையே கட்டமைக்க அறிவுத் தீயைப் பற்ற வைத்த அறிவுசார் புரட்சியாளர். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று மக்களுக்கான அரசியலைக் கற்றுக்கொடுத்த நவீன நிர்வாகி.
தமிழ் பேசும் மாநிலமாக இருந்ததை “தமிழ்நாடு” என்று பிரகடனப்படுத்திய அடையாளத்தை வடிவமைத்தவர். பதவியால் அவர் முதலமைச்சர்; அறிவால் அவர் பேரறிஞர். என்றென்றைக்கும் தமிழர்களுக்கு அவர் அண்ணா. ஏனென்றால், சி.என். அண்ணாதுரை என்பவர் வெறும் அரசியல் தலைவர் அல்ல; நவீன தமிழ்நாட்டின் அடையாளத்தை உருவாக்கிய தலைசிறந்த சிந்தனையாளர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.
கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் பயன் தர வேண்டும்! என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “ஆதாரம் காட்ட முடியுமா?...” - மு.க.ஸ்டாலினுக்கு ஓபன் சவால் விட்ட அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்...!